Thursday, 25 December 2014

வானியல் அறிவில் சிறந்து விளங்கிய பண்டைய தமிழர் ! - இன்றைய தமிழர்கள் அறியவேண்டியது !

தமிழில் அறிவியல் இல்லை, அறிவியலுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பில்லை , தமிழ் மொழி ஒரு காட்டுமிராண்டி மொழி என்று தமிழையும் தமிழர்களையும் தமிழின எதிரிகள் இழித்தும் பழித்தும் பேசி வந்துள்ளனர். அப்படி பேசியவர்களை தலைவர்கள் என்று தமிழர்களே தலையில் தூக்கி சுமக்கவும் செய்த கொடுமை தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. தமிழின எதிரிகள் திட்டமிட்டு தமிழர்களுக்கு எந்த பண்பாடும் நாகரீகமும் அறிவும் இல்லை என்ற பொய்ப்பரப்புரை செய்து வெற்றி பெற்றுள்ளனர் என்பதை நாம் அறிதல் வேண்டும்.
 

   சரி, அப்படி எத்தகைய அறிவை பண்டைய தமிழர்கள் பெற்றிருந்தனர் என்பதை நாம் ஆய்வு செய்தல் அவசியமாகும். சங்க கால தமிழர்கள் வானத்தையே தன் வீட்டின் மேற் கூரையாகக் கொண்டவர்கள். வானத்தில் நாள்தோறும் நிகழ்கின்ற வானியல் நிகழ்வுகளையும், மாற்றங்களையும் கூர்ந்து கவனித்து வானியல் தொடர்பான சிந்தனைகளை இவ்வுலகுக்கு எடுத்தியம்பியவர்கள். தமிழகத்தில் வானியல் துறையில் சிறந்து விளங்கிய பலர் வாழ்ந்தனர் என்பதை கணியன் பூங்குன்றனார், கனிமேதாவியார், பக்குடுக்கை நன்கணியார் முதலிய பெயர்கள் சான்று பகர்கின்றன. சிலேட்டர் என்னும் வானியல் அறிஞர் தமிழருடைய வானநூற்கணித முறையே வழக்கிலுள்ள எல்லாக் கணிதங்களிலும் சிறப்பானது என்னும் கருத்து ஈண்டு நோக்கத்தக்கது.

விசும்பில் ஊழூழ் செல்லக்
கருவளர் வானத்திசையில் தோன்றி
உருவறி வாரா ஒன்றன் ஊழியும்
செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்
நுண்முறை வெள்ள மூழ்கி ஆர்தருபு - பரிபாடல்-2 


இந்த பரிபாடல் பாடலடிகள் முறையாகத் தோன்றும் ஊழிக் காலங்களை வெளிப்படுத்துகிறது.

முறையே வானம் முதல் ஊழிக் காலத்திலும், காற்று இரண்டாம் ஊழியிலும், தீ மூன்றாம் ஊழியிலும், நீர் நான்காம் ஊழியிலும், நிலம் ஐந்தாம் ஊழியிலும் தோன்றிய நிகழ்வு இன்றைய அறிவியலாரும் உடன்படு கருத்தாகும்.

வானம் மூழ்கிய வயங்கொளி நெடுஞ்சுடர்க்
கதிர்காய்ந்து எழுந்தகங் கனலி ஞாயிறு - நற்றிணை:163இந்த நற்றிணைப் பாடலில், உலக உயிர்கள் ஞாயிறின் கதிர்களால் உயிர் வாழ்கின்றன. இல்லையேல் இவ்வுலகம் பனிமண்டி உலக அழிவு ஏற்படும் என்ற உண்மை புலப்பட்டு நிற்கிறது. மேலும், நற்றிணை பாடலொன்று, ஞாயிறு இருளைப்போக்க அதன் உட்பகுதி நெருப்பினால் எரிந்து கொண்டிருக்கிறது என்றும் அதைச் சுற்றிலும் ஒளிப்படலம் உள்ளது என்றும் கூறுகிறது.

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. - திருக்குறள் 1031பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது என்ற கருத்தை வெளிபடுத்தும் இக்குறளில் உலகம் தொடர்ச்சியாக சுழன்று கொண்டிருக்கிறது என்ற அறிவியலை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்படுத்துகிறது.

வள்ளலார் வழங்கிய அருட்பெருஞ்சோதி அகவல் வரிகளில் வரும் வானியல் பற்றியும் பார்ப்போம் ..

113. எண்டர முடியா திலங்கிய பற்பல
அண்டமு நிறைந்தொளி ரருட்பெருஞ் ஜோதி

எண்ணில் அடங்காத அண்டங்களுக்கு நிறைந்த ஒளியை கொடுத்துக் கொண்டிருக்கிறது அருட்பெருஞ்சோதி என்ற பேராற்றல்.
276. புனன்மேற் புவியும் புவிமேற் புடைப்பும்
அனன்மேல் வகுத்த வருட்பெருஞ் ஜோதிநீரின் மேல் புவியும் , புவியின் மேல் மலைகளும் , நிலப்பரப்பும் இவை அனைத்தும் நெருப்பின் மேல் நிலைத்திருக்கும் படி இயற்கை வகுத்துள்ளது என்ற புவியியல் அறிவை வெளிபடுத்தியுள்ளார் வள்ளலார்.

மேலும் அண்டப் பெருவெளியில் இருந்து ஒளி அண்டங்களை பார்வையிட்ட தருணத்தில் இந்த மாபெரும் ஒளி அண்டங்கள் எல்லாம் சிறு அணுக்களாக காட்சி அளித்தது என்றும் கூறியுள்ளார் வள்ளலார். நவீன விஞ்ஞானத்தில் மிகப்பெரிய தொலைநோக்கி கருவியை வைத்து மட்டுமே பார்க்கப்படும் இக்காட்சியை மிக எளிமையாக காட்சிப்படுத்தியுள்ளார் வள்ளலார்.

தமிழர்கள் வானியலை மிகத் துல்லியமாக அறிந்து வைத்திருந்தனர் என்பதற்கு இன்னும் பல ஆதாரங்கள் தமிழ் இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கின்றன் . தமிழ் இலக்கியங்கள் மூலமாகவே ஆரிய புராணங்களும் பல அரிய செய்திகளை கடன்பெற்று கதைகளாக உலகிற்கு வழங்கின. தமிழர்கள் கண்டு பிடித்ததை தாங்கள் கண்டுபிடித்ததாக வாய்க் கூசாமல் பொய் கூறினர் ஆரிய மதத்தினர். ஆரிய கட்டுக் கதை புராணங்களில் தமிழர் அறிவியலையும் , மெய்யியலையும் நிறையவே நாம் காணலாம்.

சரி , இப்படியான அறிவுக்கு சொந்தக்கார்களான தமிழர்களுக்கு அந்த அறிவு இப்போது விளங்காமல் போன காரணம் என்ன? இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் , தமிழர்கள் அந்த அறிவின் தொடர்ச்சியை பெரிதளவு இழந்து விட்டார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மையாகும். இருப்பினும் தமிழர்கள் அதை முற்றிலும் இழக்கவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இன்றும் வானியல் ஆய்வை பல தமிழர்கள் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். வானியலையும் தமிழர் மெய்யியலையும் பிரிக்க முடியாது .

மெய்யியல் விழைவோர் நிச்சயம் வானியல் ஆய்வுகள் மேற்கொண்டு தான் ஆக வேண்டும். அப்படி மெய்யியல் ஆய்வு செய்வோர் தற்போது உள்ள வானியல் ஆய்வுகளைக் காட்டிலும் பல உண்மைகளை தெரிந்து வைத்துள்ளனர். அந்த வானியல் அறிவு மரபு இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த மரபை அழியாமல் பார்க்துக் கொண்டும் வருகின்றனர் சில தமிழர்கள். நிச்சயம் இவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை, ஆய்வுகளை, மெய்யியல் உண்மைகளை ஒவ்வொரு காலத்திலும் உலகிற்கு வெளிக் கொண்டு வருகிறார்கள், வருவார்கள். அத்தகைய ஆய்வுகள் உலகிற்கே வழிகாட்டும் படியும் அமையும் என்பதை தமிழர்கள் நாம் எண்ணிப் பெருமை படவேண்டும்.

Friday, 19 December 2014

குழந்தைச் செல்வங்கள்

நம் நாடு நிறைவுடன் திகழ்வதற்கு, குழந்தைகள் என்னும் அரும்புகள் பேணப்பட வேண்டும் என்று, நம் பாரதத்தின் முதல் பிரதமர் பேராவல் கொண்டிருந்தார் என்பதை நினைவுப் படுத்தி வருகின்றோம். கடவுளின் பார்வையில் மதிப்புக்கும் பாசத்திற்கும் உரியவர்களாக குழந்தைகள் இருக்கின்றனர் என்பதை விவிலிய நூல் எடுத்துரைக்கின்றது.மக்கட் பேறு என்பது பெரும் செல்வமாக, அருட்கொடையாக கருதி, இஸ்ரயேல் சமுதாயத்தினர் மகிழ்ந்து வந்துள்ளனர் என்பதை விவிலியத்தின் பழைய ஏற்பாடும் விளக்குகின்றது.

முதுபெரும் தந்தை என்று, அச்சமுதாயத்தினர் அழைத்திடும் ஆபிரகாமை ஆசீர்வதித்த கடவுள், அவரது வழிமரபினை விண்மீன்கள் போலவும் கடற்கரை மணலைப் போலவும் பெருகச் செய்வதாக வாக்களித்துள்ளார் என்று ஆர்பரித்து வந்துள்ளனர்.

குழந்தைகளுக்கு இறை அறிவை ஊட்டுமாறும் இறை வழிபாடுகளில் பங்கேற்கச் செய்யுமாறும் பெரியவர்களுக்கு அறிவுறுத்துகின்ற மறைநூல், கடந்து வந்த பாதையின் வரலாற்றை மழலையர் நெஞ்சங்களில் நன்கு பதிய செய்திட வேண்டும் என்றும் வற்புறுத்துகின்றது. முதியவர்களின் மணிமகுடமாக அவர்களது பேரப்பிள்ளைகள் உள்ளனர் என்றும் மொழிகின்றது. கடவுள் அருளும் நலன்களை எடுத்தோதும் திருப்பாடல் ஒன்று, ""பிள்ளைகள் ஆண்டவர் அருளும் செல்வம்! மக்கட்பேறு அவர் அருளும் பரிசில்!"' என்று பறை சாற்றுகின்றது.

பாவிகளின் நண்பன் என்று பரிசேயர்களால் பரிகசிக்கப்பட்ட இயேசு பெருமான், இருவகையினரை மட்டுமே கடிந்துள்ளார். மக்களின் அச்ச உணர்வுகளைப் பயன்படுத்தி, ஆலயத்தை வியாபார கூடமாக்கும் அன்பற்ற சமயப் பெரியவர்கள் முதல் வகையினர். தீய நாட்டங்களை இளஞ்சிறார்களிடம் தூண்டக்கூடிய கயவர்கள் இரண்டாம் வகையினர். அத்தகைய தீயவர்களின் கழுத்தில் பெருங்கல்லினைக்கட்டி, ஆழ்கடலில் அமிழ்த்திடுக! என்று வெகுண்டு முழங்கினார்.

மானிடர் மீட்புக்காக மழலையாக அவதரித்த இறை இயேசு, தன் உருவாக, சாயலாக ஒவ்வொரு குழந்தையையும் நேசித்ததை காண்கிறோம். குழந்தைகளும் அவரை ஒரு நண்பராக நாடி வந்து, அவரது அருட் வாக்கில் இணைந்தனர். சிறுவன் ஒருவன் உவந்தளித்த ஓர் அப்பத்தையும் மீனையும் பல்கச் செய்த இயேசுபிரான், ஐயாயிரம் பேர்களுக்கு உணவளித்ததையும் காண்கிறோம். சிறுமியை மீண்டும் உயிர் பெறச் செய்து அவளது தாயிடம் சேர்த்த இயேசுவின் கனிவையும் காண்கிறோம்.

இயேசு தொட்டு ஆசீர்வதிக்க வேண்டும் என்று வழக்கம் போல் தாய்மார்கள் தம் குழந்தைகளுடன் வந்திருந்தனர். குரு ஓய்வெடுக்க வேண்டுமென்று எண்ணிய சீடர்கள், அவர்களை அனுப்பிவிட்டனர். அதனை அறிந்த இயேசு, அவர்களை வருந்தி அழைத்து, குழந்தைகளுடன் உற்சாகமாக உரையாடினார். சூழ்ந்திருந்த மக்களிடம், குழந்தைகளிடமே இறையரசு நிறைந்துள்ளது! என்று கூறி மகிழ்ந்தார். நீதி, சமாதானம், சமத்துவம் கொண்ட இறையரசை சின்னஞ் சிறார்களைப் போன்று எளிய மனதுடன் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தி வந்தார். எளிய மனதுடையோர் இறைவனைக் காண்பர் என்பதும் இயேசுவின் அருள் மொழிகளுள் ஒன்று.

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று பாடுகின்ற நாம், குழந்தைகளின் நலம் நாடுகின்றோமா? ஆதரவற்ற, அனாதையான, வறுமையுற்ற, விரட்டப்பட்ட குழந்தைகளை நாடிச் சென்று, நட்புடன் ஆதரவளிக்கவேண்டும் என்று சங்க ஏடு வழியாக திருச்சபை அறிவுறுத்துவதை செயல்படுத்துவோம்! குழந்தைகளோடு இறை மக்களாவோம்.

Monday, 8 December 2014

புத்தரின் பிறப்பு :

கபிலவஸ்து அருகிலுள்ள லும்பினிக் கிராமத்தில் கி.மு. 566-ல் சாக்கிய குலத்தில் பிறந்தார் கௌதம புத்தர். பெற்றோர் அவருக்கு சித்தார்த்தர் என்று பெயரிட்டு அழைத்தனர். அவருடைய தந்தை சுத்தோதனர். தாயார் மாயாதேவி. சாக்கிய குலத்தைச் சேர்ந்த சுத்தோதனர், கபிலவஸ்துவைத் தலைநகரமாகக் கொண்ட சாக்கிய நாட்டின் மன்னராவார். கபிலவஸ்து நேபாளத்தின் எல்லையில் அமைந்துள்ளது. புத்தர் பிறப்பிடம் அசோக மௌரியர் எழுப்பிய ரும்மிந்தைத் தூண் சின்னத்தால் பிரசித்திப் பெற்று விளங்குகிறது.புத்தர் பிறந்த ஏழாவது நாளில் சுத்தோதனர் இயற்கை எய்தினார். பின்னர் புத்தர் தன் அத்தையான பிரஜூபதி கௌதமியால் வளர்க்கப்பட்டார். இளமைப் பருவத்தில் யசோதரா என்னும் மங்கையை மணந்து இல்லற வாழ்க்கையை நடத்தினார். இவருக்கு ராகுல் என்ற மகன் பிறந்தான்.

சில காலங்களுக்கு பிறகு புத்தருக்கு அரண்மனை வாழ்க்கை பிடிக்கவில்லை. அமைதியை இழந்தார். இவ்வுலக வாழ்க்கையில் கண்ணுற்ற துன்பங்களைப் பற்றி ஆராயத் தொடங்கினார். ஒரு நாள் இவர் வெளியே சென்றுக் கொண்டிருந்தபோது கண்ட காட்சிகள் இவர் மனதை வெகுவாக புண்படுத்தின. வயது முதிர்ந்த ஒரு மனிதரையும், நோயாளி ஒருவரையும், பிணம் ஒன்றையும், துறவி ஒருவரையும் கண்டார். இதனால் மனம் கலங்கினார். இதற்கு முன்னால் இது போன்ற காட்சிகளையும் இவர் நேரில் கண்டதில்லை. ஆகையால் இத்தகைய காட்சிகள் இவரது சிந்தனைகளை வெகுவாகத் தாக்கியது. 

துறவறம் :

உலக வாழ்க்கையில் காணப்படும் துன்பங்களைப் பற்றியும், அதற்குப் பின்னர் என்ன நடைபெறும் என்பது பற்றியும் தீவிரமாக ஆராயத் தொடங்கினார். இத்தகைய துன்பங்களுக்கு நிவாரணம் காண வேண்டும் என்பதே தனது லட்சியமாகக் கொண்டார். எனவே இல்லற வாழ்க்கையை துறக்க தீர்மானித்தார். தனது 29-வது வயதில் கடும் துறவறத்தை புத்தர் மேற்கொண்டார். உண்மையைக் காண்பதே தனது முதன்மையான பணி எனக் கருதி, எல்லாவற்றையும் களைந்துவிட்டு அலைந்து திரியும் துறவியின் வாழ்க்கையை மனம் உவந்து மேற்கொண்டார்.

துறவிக்கோலம் பூண்ட புத்தர், வாழ்க்கையைப் பற்றியும் மரணத்திற்குப் பின்னர் நடைபெறுவது பற்றியும் அறிய விரும்பினார். இதற்காக இவர் முதலில் வைசாலியில் தங்கியிருந்த அலாரர் என்பவரிடம் பாடங்களைக் கேட்டறிந்தார். பின்னர் இராஜகிரகத்தில தங்கியிருந்த ஆசிரியரான உருத்திரிகா என்பவரிடம் சீடராக அமர்ந்தார். அவருடைய போதனை புத்தரை வெகுவாக கவரவில்லை. எனவே அவரை விட்டு விலகிச் சென்றார்.

பின்னர் கௌதமர் உருவேலா என்னும் இடத்தில் உணவு இன்றி கடும் தவம் மேற்கொண்டார். சுமார் 6 ஆண்டுகள் இவ்வாறு கழிந்தது. எனினும் தமது லட்சியத்தை அடைவதற்கு இது பயனற்றது என அறிந்தார்.

ஞானோதயம் :

பிறகு நைரஞ்சனா ஆற்று கால்வாயொன்றில் புனித நீராடி இக்கால போத்-கயா என்னுமிடத்திலுள்ள பிப்பல் அல்லது அரச மரத்தடியில் அமர்ந்தார். இறுதியில் அங்கு அவருக்கு உயர்வான ஞானம் புத்தொளி தோன்றியது. தனது 36-வது வயதில் ஞானோதயம் பெற்று நிர்வாணத்தை அடைந்தார்.

அன்று முதல் இவர் "புத்தர்" அல்லது ஒளிபெற்றவர் என்றும் "ததாகதர்" (உண்மையை அறிந்தவர்) என்றும், சாக்கியமுனி அல்லது சாக்கிய வம்சத்து முனிவர் என்றும் பல பெயர்கள் சொல்லி அழைக்கப்பட்டார்.

"புத்தன்" என்ற சொல்லுக்கு "விழித்தெழுந்தவன்", "ஒளியினைக் கண்டவன்" என்று பொருள். தன் ஆசையையும், அகந்தையையும் வெற்றி கொண்டார். "தான்", "தனது" என்ற நிலையிலிருந்து விலகினார். இதையே "நிர்வாணம்" அல்லது "நிர்வாண நிலை" என்று சொல்லுவார்கள்.

கொள்கைகள் :

ஒளி பெற்ற புத்தர், வாரனாசியின் அருகாமையிலுள்ள சாரநாத் என்னுமிடத்திலுள்ள "மான் பூங்கா" என்னுமிடத்தில் தன் கொள்கையை போதிக்கத் தொடங்கினார். 45 ஆண்டுகள் அயோத்தி, பீகார், அதையடுத்த பகுதிகளின் மக்களுக்கும், மன்னருக்கும் தாம் கண்ட பேருண்மையை ஊர் ஊராகச் சென்று பரப்பினார். இராஜகிரகத்தில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது போதனைகளை நடத்தி வெற்றிகண்டார்.

கபிலவஸ்துவில் ராகுல், மகா பிரஜாபதி ஆகியோரை தன் சமயத்தில் சேர்த்துக் கொண்டார். மகத மன்னர்களான பிம்பிசாரர், அஜாதசத்துரு ஆகியோர்களை பௌத்த சமயத்தை தழுவும்படி செய்தார். கோசல நாட்டிற்கும் சென்று பலரை பௌத்தத்தை தழுவிட வழிகோலினார்.

இந்த இடங்களிலெல்லாம் அவரது நான்கு உண்மைகளையும், "நான்கு அதிசய சத்தியங்களையும்", "எண் வகை வழிகளையும்" கூறினார். பிறகு தனது 80-வது வயதில், குசி நகரத்தில் கி.மு. 486-ல் உயிர் நீத்தார்.

கி.மு. 3-ம் நூற்றாண்டு வட இந்தியா, கிழக்கிந்தியா, ஸ்ரீலங்கா ஆகிய இடங்களில் புத்த மதம் பரவி இருந்தது. கி.பி. முதலாம் நூற்றாண்டில் புத்தமதம் கிழக்கு நாடுகளுக்கு பரவியது. கி.பி. 7-ம் நூற்றாண்டில் திபெத்திற்குச் சென்றது. 

புத்தரின் போதனைகள் :

புத்த சமயக் கொள்கைகளைச் சுத்த பிதகம் கூறுகின்றது. மனத் துயரிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் விடுபடுவதே பௌத்த சமயத்தின் முக்கிய நோக்கமாகும். தன்னலம் துன்பங்களுக்கெல்லாம் காரணமாக இருக்கிறது. ஆசையை ஒழித்தால் தான் மன அமைதியும், ஆனந்தமும் அடைய முடியும். தீமைகளை தவிர்த்து நன்மைகளைச் செய்து வந்தால் ஆசை அகன்றுவிடும்.

"நான்கு உயரிய உண்மைகளும்", "எண் வகை வழிகளும்" பிறவி என்பது ஒருவரது செயலினால் ஏற்படும் பயன் என்ற கோட்பாடும் தத்துவ இயலுக்கு புத்தர் ஆற்றிய அரிய தொண்டாகும்.

நான்கு உண்மைகள் :

1. துன்பம் : இவ்வுலக வாழ்க்கை துன்பகரமானது. ஏழ்மை, நோ, மூப்பு, இறப்பு முதலியவை நிறைந்த உலக வாழ்க்கை, எளிதில் விலக்கிக் கொள்ள முடியாத துன்பம் நிறைந்தது. இவை நம்மை தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

2. அதன் தோற்றம் : சிற்றின்ப ஆசையே துன்பத்தின் காரணம். தான் இன்பமாக வாழ வேண்டும் என்ற தன்னலம் கலந்த ஆசையே துன்பங்களுக்கு காரணமாகும்.

3. அதை ஒழித்தல் : ஆசை ஒழிக்கப்பட்டாலொழிய துன்பத்தை ஒழிக்க முடியாது.

4. அட்டசீலம் : (எண்வகை வழி) துன்பத்தை ஒழிக்கும் வழி இதுவேயாகும். எண்வகை வழிமுறைகளை கடைபிடித்தால் ஆசைகளை ஒழித்துவிடலாம்.

நடுவு நிலை வழி, இடை வழி : புத்தர் கூறிய சமய முறையில் ஆசையை அறவே ஒழித்து, பல்வகையான வாழ்க்கையின் மீது நாட்டம் கொள்ளாமல், வாழ்க்கையில் ஆசையால் விளையும் துன்பங்களை ஒழிப்பதே நிவரணமாகும்.

இடைவழி : ஆழ்ந்த அறிவு, விவேகம், புலமை, அமைதி, நிர்வாணம் ஆகியவற்றை அடையச் செய்கின்றன. இடைவழியில் எட்டு கொள்கைகள் உள்ளன. இதற்கு "அட்ட சீலம" அல்லது "எண் வகை வழிகள்" என்று பெயர்.

அட்டசீலம் அல்லது எண்வகை வழிகள் :

1. நல்ல நம்பிக்கை : நான்கு உண்மைகளில் நம்பிக்கைக் கொள்ளுதல்.

2. நல்லெண்ணம் : இல்லற வாழ்க்கையை விட்டொழிக்கவும், சினத்தை அகற்றவும், ஒருவருக்கும் தீமை செய்யாமலிருக்கவும் தீர்மானித்தல்.

3. நல்வாய்மை அல்லது நல்லமொழி : பயனற்றதும், கடுமையானதும் பொய்யானதுமான சொற்களை கூறாதிருத்தல்.

4. நற்செய்கை : பிறரை துன்புறுத்தாமலும் (அகிம்சை) களவாடாமலும் நன்னெறி தவறாமல் இருத்தல்.

5. நல்வாழ்க்கை : பிச்சை எடுத்து வாழ்தல்.

6. நன் முயற்சி : தீமையை அகற்றி நற்குணங்களை வளர்த்தல்.

7. நற்சாட்சி : சிற்றின்ப ஆசையையும், துன்பத்தையும் அடையாவண்ணம் விழிப்புடனிருத்தல்.

8. நல்ல தியானம் : லட்சியத்தை (குறிக்கோளை) அடைய மனம் ஒருவழிபட்டு சிந்தித்தல்.

சுருக்கமாகக் கூறினால், புத்தருடைய அறிவுரைகளில் நம்பிக்கையுடன் அவற்றை அறியவும், அதன்படி நடக்கவும் முயன்று ஒழுக்கம் தவறாத நடத்தையுடன் மனதை ஒருவழிபடுத்தி இறுதியான இன்பத்தை (வீடு, மோட்சம்) அடைய வேண்டுமென்பதாகும்.

அவரது காலக் கட்டத்தில் இந்திய தத்துவ இயலில் ஆதிக்கம் செலுத்தி வந்த கடவுள், ஆன்மா, மாறாத நிலையான உண்மை அல்லது வஸ்து போன்ற கருத்துகளை அறிவார்த்த முறையில் களைந்து உலகம், வாழ்க்கை, சிந்தனை குறித்த முற்றிலும் மாற்றான கருத்துகளை முதன் முதலில் பறை சாற்றியவர் புத்தர் என்றால் அது மிகையாகாது.

ஓம்காரமாய் திகழும் முழுமுதற் கடவுள்

கஜாந நம்பூத கணபதி ஸேவிதம்
கபித்த ஜம்பு பலஸார பக்‌ஷிதம்
உமாசுதம் சோக விநாஸ காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
 
எந்தவொரு செயலைத் தொடங்கினாலும் விநாயகர் அருள் இன்றி அந்த செயல் கைகூடாது என்பதையே முழுமுதற் கடவுளாம் விநாயகர் என்று சொல்கிறோம்.
அந்த வகையில் முருகப்பெருமான், வள்ளிக் குறத்தியை மணம் முடிக்க தனது தமையனாம் விநாயகரை மறந்ததாலேயே பிரச்சினைகள் ஏற்பட்டு பின்னர், விநாயகப் பெருமானை வேண்டிக் கேட்டுக் கொண்டதன் பேரில் வள்ளியைத் திருமணம் செய்வதற்கு விநாயகர் உதவியதாக புராணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
'விநாயகர்'- என்ற பெயரிலேயே வினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பவர் என்ற பொருள் உள்ளது.
 
வினைகளைக் களைபவர், வினைகளை அண்டவிடாமல் விரட்டிக் காத்து ரட்சிப்பவர் என்றும் பொருள் கொள்ளலாம்.
 
வாழ்க்கையில் ஏற்படும் இடர்பாடுகளை - வினைகளை - சோகங்களை - தன்னை நாடி வரும் பக்தர்களின் வினைகளைத் துவம்சம் செய்து - நாசம் செய்து அவர்களுக்கு நிம்மதியை அளிப்பவர் என்பதே விநாயகர் என்பதன் பொருள்.
 
தவிர விநாயகரின் உருவமே ஒரு விசித்திரத் தோற்றம் கொண்டது.
 
வேழ முகம் - யானையின் முகத்தை உடையவர். பொன்னிறத் தோற்றத்துடன் கூடிய மனித உடலில் தர்ப்பரி நூல் மார்பு, பேழை வயிறு. (மிகப்பெரிய பூதம் போன்ற வயிறு). துதிக்கையுடன் சேர்த்து ஐந்து கைகள். செந்தூரம் பூசிய முகம். சிலம்பு அணிந்த இரு கால்கள்.
 
இதுபோன்ற அனைத்து உருவங்களும் சேர்ந்ததே விநாயகப் பெருமானின் மொத்த வடிவம். விநாயகரின் உருவமே ஒரு ஐக்கியத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
 
அனைத்து நாதங்களுக்கும் முன்னோடியாத் திகழ்வது ஓம்கார ஒலி என்றால், அநத ஓம்காரமாய் திகழ்வது விநாயகர் என்றால் அது மிகையில்லை.
 
எனவே தான் விநாயகப் பெருமானை ஓம்கார நாயகர் என்றும் அழைக்கிறோம்.