Thursday, 15 January 2015

கோமாதா ஆனது எப்படி?

 

அம்மாவுக்கு ஈடு இணை யாருமில்லை. பெற்ற தாய் தன் ரத்தத்தை பாலாக்கி குழந்தைக்கு கொடுப்பாள். ஆனால், அது குழந்தைப் பருவம் வரையே! ஆனால், பிறப்பு முதல் கடைசிநாள் வரை நம்மை குழந்தையாகவே கருதி பாலைத் தருவது கோமாதாவாகிய பசு. பால் மட்டுமில்லாமல் அதிலிருந்து சுவாமியின் அபிஷேகத்திற்கும், நமது பயன்பாட்டிற்கும் உரிய தயிர்,மோர், நெய் ஆகியவையும் நமக்கு பாலில் இருந்து கிடைக்கிறது. அதனால், பெற்ற தாயாருக்கு நிகராக பசுவைக் "கோமாதா' என அழைக்கிறோம். "கவ்' ஆங்கிலச் சொல் கூட "கோ' என்ற எழுத்தில் இருந்து சென்றது தான். திருமால் கிருஷ்ணாவதாரம் எடுத்த போது, பிருந்தாவனத்தில் பசுக்களை மேய்த்தும், குழலூதியும் லீலைகள் செய்ததாக பாகவத புராணம் கூறுகிறது. அவரது குழலோசை கேட்டு பசுக்கள் தங்களை மறந்து நின்றன. குழலூதும் கிருஷ்ணர் சித்திரத்தைப் பார்த்தால் அரிய உண்மை ஒன்றும் விளங்கும். அவரது கால் பூமியில் செங்குத்தாக ஊன்றியிருக்கும். இடது உள்ளங்காலைப் பசு தன் நாவால் சுவைத்தபடி இருக்கும். இதன்மூலம் பாலகிருஷ்ணரின் திருவடியைப் பற்றிக் கொள்வதே பேரானந்தம் என்பதை பசு உணர்த்துகிறது. தேவலோகப் பசுவான காமதேனு பெண் முகமும், பசுவின் உடம்பும் கொண்டது. பாற்கடலில் இருந்து பிறந்த இந்தப் பசு, கேட்டதை வாரி வழங்கும். ""உலகத்தின் தாயான காமாட்சி அன்னையே காமதேனுவாக இருந்து கேட்டதை நமக்கு தருகிறாள்,'' என சரஸ்வதி அருள் பெற்ற மூகர் என்ற புலவர், வடபஞ்சசதீ என்னும் ஸ்தோத்திரத்தில் குறிப்பிடுகிறார். சுவாமியும், அம்மனும் காமதேனு வாகனத்தில் பவனி வரும் போது, நாம் வேண்டுவது கிடைக்கும்.


காஞ்சி பெரியவர் வேண்டுதல்


பசு தானம் செய்வதால் கொடிய பாவங்கள் நீங்கும் என தர்ம சாஸ்திரம் கூறுகிறது. "கோதானத்திற்கு மிஞ்சிய புண்ணியம் இல்லை' . ஆனால், பசு தானம் வாங்குபவருக்கு அதனைப் பாதுகாக்கும் தகுதி இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திய பிறகு தானம் செய்ய வேண்டும். ""ச்யவன மகரிஷி தன்னுடைய ஸ்லோகம் ஒன்றில், "எங்கு பசுக்கள் பயமின்றி துன்பம் இல்லாமல் நிம்மதியாக மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறதோ, அங்கு பாவம் எல்லாம் நீங்கி நாடே ஒளி பெற்றுத் திகழும்'என குறிப்பிட்டிருக்கிறார். அந்த உயர்ந்த நிலையை உலகம் அடைய கிருஷ்ணர் அருள் புரியட்டும்'' என காஞ்சிப்பெரியவர் வேண்டுகிறார்.


நேரம் நல்ல நேரம்


காலில் படும் புழுதியை துச்சமாக கருதுவர். ஆனால், தெய்வீகமான பசுவின் குளம்படி பட்ட தூசியை "கோதூளி' என்று சொல்வர். பசுக்கள் கூட்டமாகச் செல்லும் போது புழுதிப்படலம் கிளம்பும். அந்த புழுதி நம் உடம்பில் பட நேர்ந்தால் புனித நதியில் நீராடிய புண்ணியம் சேரும் என்கிறது சாஸ்திரம். கிருஷ்ணரின் மேனி எங்கும் கோதூளி படும்படியாக நின்றதால் அவர் அழகுக்கு அழகு சேர்ந்ததாகவும், மனம் மகிழ்ந்ததாகவும் பாகவதம் வர்ணிக்கிறது. ஆதிசங்கரர் கோவிந்த அஷ்டகத்தில், கிருஷ்ணர் கோதூளியில் திளைத்தாடியதைப் போற்றியுள்ளார். மேய்ச்சல் முடிந்து பசுக்கள் வீடு திரும்பும் மாலை நேரத்தை "கோதூளி லக்னம்' என்று சொல்வர். நல்ல நேரமான இதில் தொடங்கும் செயல்கள் கிருஷ்ணர் அருளால் இனிதே நடந்தேறும்.


பாலுக்கு இல்லை விரதம்


* சத்வம், ராஜஸம், தாமசம் என்ற மூன்று குணங்கள் மனிதனிடம் உள்ளன. மனத்தெளிவு, சாந்தம், அன்பு, அமைதி ஆகியவை சத்வகுணம். பரபரப்பு, ஆசை, கோபத்தை வெளிப்படுத்துவது ராஜஸ குணம். உற்சாகம் இன்றி எப்போதும் தூங்கி வழியும் நிலை, மந்த புத்தியாக இருப்பது தாமச குணம். இதில் சத்வம் நல்ல குணம், மற்ற இரண்டும் தீய குணம்.


* நல்ல குணத்தோடு வாழ விரும்பும் சாதுக்கள் கூட பசும்பால் குடிக்கலாம் என சாஸ்திரம் அனுமதிக்கிறது. ஏனென்றால், அதன் மூலம் உடலும், மனமும் சாத்வீக குணத்தைப் பெறுகின்றன. அதனால், தான் விரதமிருப்பவர்களுக்கு பால் ஒரு திவ்ய உணவாக இருக்கிறது.


* பசுக்களின் நிறத்திற்கு ஏற்ப ஒவ்வொரு குணம் இருப்பதாக தேன்விருந்து என்னும் நூலில் வாரியார் குறிப்பிடுகிறார். தெய்வீக குணம் மிக்க கரியநிற பசுவின் பால் சிறந்தது. வாதநோய் போக்கும் இந்தப் பசுவை காராம்பசு, கபிலா என்று குறிப்பிடுவர். கோயில் அபிஷேகத்திற்கும், ஹோமத்திற்கும் இதன் பால் மிகவும் உகந்தது.


* மஞ்சள் நிறம் கொண்ட பசுவின் பால் பித்தநோய் போக்கும். வெண்ணிறப் பசுவின் பால் நல்ல குணத்தைக் கொடுக்கும். சிவந்த மற்றும் பல வண்ணம் கொண்ட பசுவின் பாலைக் குடிக்க வாயு பிரச்னை தீரும். கன்று ஈன்ற பசுவின் பாலை மட்டும் 16 நாட்களுக்கு குடிக்கக் கூடாது.


கோயிலை சுற்றின மாதிரி


பாரத தேசத்தில் எத்தனையோ திருத்தலங்கள் இருக்கின்றன. இவற்றை எல்லாம் தரிசிக்க வாழ்நாள் போதாது. புனித நதிகள், கடல்களும் கூட உலகில் இருக்கின்றன. இவற்றில் நீராடவும் நம்மால் இயலாது. ஆனால், இந்த புண்ணிய பலனை எளிதாக அடைய ஒரே வழி கோமாதாவான பசுவை வணங்குவது தான். அதன் உடம்பில் முப்பத்து முக்கோடி தேவர்களும், சகல தேவதைகள், புண்ணிய தீர்த்தங்கள், மலைகள் எல்லாம் அடங்கியுள்ளன. தினமும் காலையில் நீராடியதும் பசுவை வலம் வந்து வணங்கினால் எல்லா கோயில்களையும் தரிசித்த பலன் உண்டாகும்.