Sunday, 12 July 2015

சர்வமும் சிவமயம்

அகிலம் எங்கும் இயற்கையாக வியாபித்துக் காண்பது பஞ்சபூதங்கள் எனப்படும் ஆகாயம், பூமி, நீர், தீ, காற்று என்ற ஐவகைப் பெரும் பூதங்கள் ஆகும்.


இதில் ஆகாயம் எமக்கு மேலே கூரையாக பூமி எம்மைத் தாங்கும் நிலமாக கண்ணுக்கு தெரியும் நீராக நெருப்பாக இருக்கின்றன. ஆனால் இந்தக் காற்று மட்டும் எம்மை வருடிச் செல்கின்ற உணர்வை ஊட்டிச்செல்கின்ற  உயிருக்கு மூச்சாய் விளங்குகின்றது.
ஆக இப்பிரபஞ்சமாகிய உலகில் உயிர் வாழ உயர் காற்றாய் பிராணவாயு அவசியம். நீர் அவசியம் வெப்பம் அவசியம். இவைகள் இல்லை எனில் உயிரினங்கள் வாழ்வது கடினம். ஆக்கம் பெறுவதற்கும் உயிர் வாழ்வதற்கும் என இறைசக்தி அளித்ததுவே இயற்கையாகும். அழகு மலைகளையும், அருவிகளையும், நீருற்றுகளையும், ஆறுகளையும், காடுகளையும், கடலையும் படைத்தார். ஆறரிவு மனிதர்க்கு படைத்தார். அவனோ நிலங்களை ஐவகையாகப் பிரித்தான். மருதம், முல்லை,
குறிஞ்சி, நெய்தல், பாலை இப்படி நிலங்களில் உணவுப்பயிர் வளர்த்து உயிர் வாழ்ந்தான். ஆக சர்வலோகங்களையும் தாபித்த சர்வேஸ்வரன் உயிரினத்துக்கு எது தேவையோ அவற்றை எல்லாம் அண்டம் எங்கும் வியாபித்திருந்தார். ஆக்குவதும்  காப்பதும் அழிப்பதும் என முத்தொழில்களை செய்து கொண்டிருந்தார்.
யோக நிவடையில் இருப்பதால் யோகீஸ்வரர் என போற்றப்பட்டார். அப்படி தியானத்தில் சிவன் வீற்றிருந்த வேளை அவரருகே இருந்த அன்னை பார்வதிதேவி விளையாட்டாய் சிவனின் கண்களை ஒருகணம் பொத்திவிட அக்கணம் உலகே இருண்டு விட்டது. அதனால் உயிர்கள் தவித்தன. என்ன செய்வது தன் தவறை உணர்ந்து இறைவனை மன்றாடினார். ஆனாலும் அந்தக் கணமே  இரவுபகல் தெரியாது ஒரெஇருட்டாக மாறியது, அஞ்ஞான இருளில்அகிலமே இருண்டுவிட்டது.  நானே பெரியவன் என்று விஸ்ணுவும், படைப்பவன் நானே பெரியவன் என்று பிரம்மாவும் வாக்குவாதம் செய்யதனர். சர்வமும் சிவமயமாய் துன்பங்களைப் போக்கக் கூடியவரான சிவசக்தியை ஒருகணம் மறந்தனர். நீயா நானா  என்று அவர்களுக்குள் போட்டி போடத்தொடங்கினர். அப்போது அருட்பெரும் ஜோதியாக இருவருக்கும் நடுவே சிவன் ஒளியாகத் தோன்றினார். அவர்கள் இருவரும் தமக்கு இடையில் குறுக்கிடும் சோதியை வியப்புடன் பார்த்தனர். வளர்ந்து கொண்டே செல்லும் சோதியை தடுத்திட இருவரும் என்ன செய்வது எனவிழித்தனர். அப்போது அசரீரி ஒலித்தது இச்சோதியின் அடிமுடியை முதலில் யார் கண்டு பிடிக்கின்றனரோ அவரே பெரியவர் என்றது.
போட்டி ஒன்று இருந்தால்தான் உலகம் முன்னிலை வகுக்கும். இறைவனின் திருவிளையாடல் புரிவதும் இதற்காகத்தானோ. இதிலே சிந்திக்கவேண்டிய விடயம் என்வென்றால் பன்றி உருவெடுத்து அடியைத்தேடி பூமியைத் துளைத்து சென்ற விஸ்ணுவோ அடியைக் காணமுடியாது அடியைப் பணிந்து நின்றார். ஆனால் முடியைத்தேடி அன்னப்பறவை உருவெடுத்து சென்ற பிரம்மாவிற்கு முடியையும் காணமுடியாது முடிவில்லாத இறையை ஏற்றுக்கொள்ள முடியாது தவித்தார். அப்போது தாழம்பு தலையில் இருந்து விழுந்து கொண்டு இருந்தபோது அதைச்சாட்சிக்கு அழைக்கிறார். பொய்ச்சாட்சி சொல்ல தாழம்பு ஒத்துக்கொண்டு சிவனாரிடம் முடியைக்கண்டதாக பிரம்மா கூறியதும் அதற்கு தாழம்புவும் ஒத்துக்கொண்டு சாட்சி
சொல்லியது. எல்லாம் அறிந்த மெய்ப்பொருள் எங்கும் நிறைந்த பொருள் சிவனும் பாதியை கண்டாயா முடிவைத் தொட்டாயா என்று கேட்கிறார்.
அவர் முழுவதும் அறிந்தவர் சிவனிடம் மறைக்க முடியாது தலை குனிந்து நின்ற பிரம்மனிடம்  வேதங்களைப் படைத்த உமக்கு முடிவற்ற பரம் பொருளை தெரியவில்லையே  என்றுகூறினார். உண்மையே உண்டு எனத் தெரியாததால் உனக்கு இனி கோவிலில் பூஜைகள் இல்லை. தாழம்பு பொய்சாட்சி சொல்லியதால் பூஜைக்கு தாழம்புவை நிராகரித்தார். ஆகவே போட்டி ஒன்று வரும் போது தொழிலில் உழைப்பாக இருந்தாலும் செழிப்பாக இருந்தாலும் உண்மையும் பணிவும் இருந்தால் அவர் போற்றப் படுகிறார். பரந்தாமனாகிய விஸ்ணு அடியைக் காணாது அடி பணிந்தார். ஆகவே வழிபடப்படுகிறார். 
"ஹரியும் சிவனும் ஒன்று அறியாதவன் வாயில் மண்ணு" என்று இன்றும் இதை வழக்காக சொல்வார்கள். சைவம் சிவனுக்கும், வைஸ்ணவம் விஸ்ணுவுக்கும் என மதங்களும் அவர்களுக்கு என இராத்ரிகளும் விரத நாளாக புண்ய நாளாக வழக்கத்தில் இருந்து வருகிறது. ராத்ரம் என்ற சொல்லுக்கு மங்களங்கள் என்று அர்த்தம் உண்டு. ஆக சிவனாரின் கண்களை விளையாட்டாய் உமைஅம்பிகை பொத்தி விட்டாலும் அக்கணமே கையை விலக்கி விட்டாலும் இருள் சூழ்ந்த அகிலத்தின்
இருள் போக்கி ஒளி பெறச்செய்ய மங்களங்கள் பெற்றிட  மகேச்வரி இரவுபகல் தெரியாது இருண்ட அந்தப் பொழுதில் சிவபூஜை புரிந்தாள் அதனால் அந்நாள் சிவராத்திரி ஆகியது.
செல்வம் என்பது வரும் போது கூடவே பிரச்சனைகளையும் கூட்டி வரும். அப்படித் துன்பங்களை தராத அளவிற்கு மாசு இல்லாத மங்களம் கிட்டுவதுதானே மகிழ்ச்சி. மாசி மாதத்தில் வரும் கிருஸ்ன பட்ச சதுர்த்தசி அமாவாசைக்கு முதல்நாள் இரவு கண்விழித்தல் நல்லது துக்கங்களை விரட்டும் சிவனை நினைந்து சிவாயநம என்னும் பஞ்சாட்சரத்தை ஓதி விரதம் அனுட்டித்து சிவராத்ரி நாளில் வழிபடுவோருக்கு கோடி கோடி பாபங்கள் விலகும். அஞ்ஞானம் அகலும். அறிவும் ஆற்றலும் பெருகும். மங்கலங்கள் பெருகி மனை சிறக்கும். அப்படிப்பட்ட மகத்தானது இவ்விரதம்.
உலகம் உய்ய விரும்பிய உமை மகேஸ்வரிக்கு மகேஸ்வரன் உபதேசித்த விரதம், பாக்கியங்கள் தர வல்லது என்று பரந்தாமனுக்கு பரமன் அருளிய விரதம், பிரமிக்கும்படியாக பலன்கள் தரும் என்று பிரம்மனுக்கு பிறைசூடன் கூறிய விரதம் இப்படி பலபெருமைகள் கொண்டது மகா சிவராத்திரி விரதமாகும். இந்நாளில் சிவாலயங்கள் சென்று நான்கு ஜாமமும் கண்விழித்திருந்து அபிஸேக பூஜை ஆராதனைகளில் கலந்து சிறப்பு வழிபாடு செய்வது நன்மைகள் கிட்டும். நாயன்மார்களால் தேவாரங்களில் புகழ்ந்து போற்றி வணங்கப் படும் சிவபெருமான் மீது மணிவாசகர் தமது திருவாசகத்தில் உருகிப் பாடுவதை, செவி மடுப்போம். நாமும் சிவராத்திரி நாளில் மனமுருகப் பாடி அருள் பெறுவோம்.
அன்பு உண்மை அடக்கம் எப்போதும் நிறைவு தரும். சிவனின் தலையில் இருக்கும் சந்திரப் பிறையானது சாய்ந்து இருப்பது தலைவன் தாள் பணிவதற்காம்,அதுபோல் கங்கை நீராக பணிந்து கீழே நோக்கிப் பாய்வதால் பூமியில் உயிர்கள் வளமும் வலுவும் பெறுகிறார்கள். விக்கிரகங்கள் யாவும் கையில் மேலும் கீழும் அபயம் கொடுப்பது போல் அமைந்திருக்கின்றன. அடிபணி, அருள் பெறு என்று கூறாமல் கூறுகின்றனர்.

 "அருளுடைச்சுடரே அளிந்ததோர் கனியே பெருந்திறல் அருந்தவர்க் கரசே
 பொருளுடைக்கலையே புகழ்ச்சியைக் கடந்த போகமே யோகத்தின்பொலிவே
 தெருளிடத்தடியார் சிந்தையுட் புகுந்த செல்வமே சிவபெருமானே
 இருளிடத்துன்னைச் சிக்கனெப்பிடித்தேன் எங்கெழுந்தருளுவதினியே"