Saturday, 25 November 2017

குல தெய்வ வழிபாடு

நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன் பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம்குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப் பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அதுதான்‘ கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை. 


 
பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலிக் கண்ணி போல அறுபடாமல், ஒரே சகோதரத்துவத் தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.
 
 
இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன.அந்தக் கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம் போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வக் கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, முடி காணிக்கை என்ற முதல் மொட்டை மற்றும் காதுகுத்து என்று தொடர்ந்து வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசைத் தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்கமுடியுமா?”
 
 
அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்குப் பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்கக் கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப் போக்கு உள்ளது?
 
ஒரு குடும்பத்தைப் பொருத்த வரையில் அந்த இறைசக்தி குல தெய்வமாக, அவர்களுக்கான ஒருபெயரில் வெளிப்படுகிறது. இப்படிச் சொல்வது கூட தவறு. வெளிப்பட, வழிவகை செய்யப் பட்டது! அதுவும் யாரால்? நம் முன்னோர்களால்! அவர்கள் யார்? நம்முடைய தொடக்கங்கள்… நாம் யார்? அந்தத் தொடக்கத்தின் தொடர்ச்சி! மொத்தத்தில், நாம் வேறு அவர்கள் வேறு இல்லை.
 
இந்த வழிவழிப் போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாகப் புண்ணியத்தைக் கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த இறைசக்தியைத் தொழும் போது, அவர்களும் பித்ருக்களாக விண்ணில் இருந்துபார்க்கிறார்கள். நாமும் ஆசீர்வதிக்கப் படுகிறோம். இது எத்தனை தூரப் பார்வையோடு, வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்?”
 
இந்தக் குலதெய்வ வழிபாட்டில் மிகப் பெரிய நல்ல சமாச்சாரம் ஒன்றும் அடங்கியுள்ளது. சந்தர்ப்ப சூழல்களால் அல்லது  பூர்வ கர்மத்தால், அதுவுமல்லாது பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு பக்தி உணர்வு இல்லாமல் போகிறது என்று வையுங்கள். அதாவது, கண்ணுக்குப் புலப்படாத இந்தக் கடவுளை நாம் நம்பத் தயாரில்லை.
 
, நாத்திகத்தில் நம்பிக்கை ஏற்பட்டு அதிலேயே அவர் போகும் நிலை வந்தாலும் பெரிதாய் தோஷமில்லை. ஏனென்றால், அவர் இவ்வாறு ஒருநாத்திக நிலைப்பாடு கொள்ளும் முன்பே, இந்தப்பரம்பரை வரிசையில் பெற்றோர்களால் வணங்க வைக்கப்பட்டு ஆசீர்வதிக்கவும் பட்டிருப்பதால், அவர் ஒரு நாள் நிச்சயம் மனம் மாறி அருள் தொடர்புக்கு ஆட்படுவார் என்பது தான் இதிலுள்ள மிகச்சிறந்த ஒரு விஷயமாகும்.
 
குறைகள் தீர்க்கும் குலதெய்வ வழிபாடு
 
குலதெய்வம் – குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.  குலதெய்வத்தினை குலதேவதை என்று அழைப்பர்.  தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.    எத்தனை தெய்வங்கள் இருப்பினும் எல்லா வித பூசைகள் மற்றும் வழிபாடுகளிலும் குலதெய்வத்திற்கே முதலிடம்.
 
குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினைத் தரும்.  மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.  குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும்.  ஆனால் அதன் சக்தியை அளவிட முடியாது.  சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.  எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும்.
 
நம்மில் பலர் பல தெய்வங்களை வழிபாடு செய்து வருவார்கள்.  அவ்வாறு செய்வது தவறில்லை.  அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் ஆகாது.  அவை இஷ்ட தெய்வங்கள் அல்லது இஷ்ட தேவதைகள் எனப்படும்.  இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு கீழே தான்.  மற்ற தெய்வங்களும் கூட குலதெய்வத்திற்கு கீழே தான்.  மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும்.
 
நம் குடும்பத்தை பற்றி அறிய யாரிடம் குறிகேட்க சென்றாலும் குறிசொல்பவர் நம்குல தெய்வத்தை அழைத்து அதனிடம் கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக எதையும் சொல்ல முடியாது.
 
இதை உணர்ந்த மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும் காலத்தில் யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ அவரது குலதெய்வத்தினை மந்திர கட்டு மூலம் கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான் செய்வினை செய்வார்.  மந்திரவாதிகள் தாங்கள் வசப்படுத்திய தேவதைகளின் மூலம் மற்றவர்களின் குலதெய்வத்தின் விபரங்களை எளிதில் பெற்று விடுகிறார்கள்.  மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும் உண்டு.  அவை அந்த மந்திரவாதிகளை அழித்த வரலாறும் உண்டு.
 
குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.  அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.  எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.  குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை.  யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.
 
குலதெய்வமே தெரியாமல் பல குடும்பங்கள் பலவித இன்னல்களை அனுபவித்து வருகின்றன.  குலதெய்வம் தெரியாமல் எந்த பூசைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் மற்றும் மந்திர செபங்கள் செய்தாலும் பலனில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.  எனவே எப்பாடுபட்டாவது குலதெய்வத்தினை கண்டறிந்து அதற்குரிய வழிபாட்டினை செய்து வரவேண்டும்.
 
நமது முன்னோர்கள் நமது குலதெய்வத்தினை வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவரவர் சொந்த பந்தங்கள், உறவினர்கள் மற்றும் பங்காளிகள் இவர்களுடன் ஒன்று சேர்ந்து கூட்டு வழிபாடு நடத்தி நிம்மதியாக வாழ்ந்திருக்கிறார்கள்.  அவர்களின் வாழ்க்கையின் இன்னல்கள் வந்தாலும் அவை வெகு நாட்கள் நீடிப்பதில்லை.  குலதெய்வத்தின் அருளால் அவை சூரியனைக் கண்ட பனி போல் விலகி விடும்.
 
குலதெய்வமே தெரியாதவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் கால பைரவர் சந்நிதிக்கு சென்று அர்ச்சனை செய்து தங்களின் குலதெய்வத்தினை காட்டும் படி காலபைரவ பெருமானிடம் வேண்டிக்கொள்ள வேண்டும்.  அந்த சமயத்தில் வேறு எந்த கோரிக்கைகளையும் காலபைரவ பெருமானிடம் முன் வைக்கக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.  இவ்வாறு 9 வாரங்கள் வியாழக்கிழமையில் குரு ஓரையில் காலபைரவ பெருமானுக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும்.
 
மேலும் அர்ச்சனை முடிந்தவுடன் பசுவிற்கு ஒரு கட்டு அகத்தி கீரை உணவாக அளிக்க வேண்டும்.  இவ்வாறு 9 வாரங்கள் செய்து வரும் போது 9 வியாழக்கிழமைகளில் கண்டிப்பாக உடலுறவு கூடாது.  இவ்வாறு செய்து வரும் காலத்தில் காலபைரவர் தங்களின் குலதெய்வம் பற்றி அறிய வைப்பார்.  யாராவது குலதெய்வம் பற்றி தங்களுக்கு தகவல் தரலாம்  அல்லது கனவில் தங்களின் குலதெய்வம் பற்றி விபரம் கிடைக்கும்.
 
மேற்கண்ட வழிபாட்டினை அசைவ உணவை நிரந்தரமாக நிறுத்திய பின்பே செய்து வரவும்.  அசைவத்தினை நிறுத்தாமல் செய்தால் விபரீத விளைவுகள் ஏற்படும்.  அசைவ உணவு, மது பழக்கம், முறையற்ற உறவு இவற்றை தவிர்த்து வழிபாடு செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.
 
 பெண்களும் குல தெய்வங்களும்
 
பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குலதெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான். பிறந்த வீட்டில் ஒரு தெய்வம் புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்
 
திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது.
 
பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை செய்யும் வழிபாடு அவர்களை ஆண்டு முழுவதும் காப்பாற்றும்.புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் சமாளிக்ககூடிய ஒரு ஆற்றலை தரும்.
 
இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழா காலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.
 
குலதெய்வ வழிப்பாட்டில் குறைபாடுகள் ஏற்படும் போது எண்ணிய காரியங்கள் ஈடேறுவதில் சிக்கல், பொருளாதார நிலையில் மந்தமான போக்கு, செய்தொழில் முடக்கம், சேர்ந்தவரால் விரையம், பிள்ளைகள் வழியில் தொல்லை . எவ்வளவு வருமானம் வந்தாலும் சேமிக்க முடியாதது என்று பல்வேறு இடர்பாடுகள் தோன்றும்.
 
ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. 
 
குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்நத ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.
 
வீடு, வாசல், நிலம், நீச்சு, நகை, நட்டு இவையெல்லாம் காசிருந்தால் வாங்க முடிந்தவை. கல்வி, பிள்ளைப் பேறு, ஆரோக்கியம், நீண்ட ஆயுள் இவை எல்லாம் அருள் இருந்தால் மட்டுமே பெற முடிந்தவை ஆகும்.
 
இந்த பூமியில் ஒரு நல்ல வாழ்வு வாழ்ந்திட இரண்டும்தான் தேவைப்படுகிறது. இதில் பின்னதான அருள் சார்ந்த விஷயம் வந்துவிட்டால், முன்னதாக உள்ள பொருள் சார்ந்த விஷயங்களை நாம் சுலபமாக அடைந்து விடலாம். எனவே, பிரதான தேவையே அருள்தான்!
 
எனவே உங்கள் குல தெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி – இயன்றபோது – (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள். அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள். அக்கோவிலுக்கு உதவுங்கள். பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்யுங்கள். பிறகு பாருங்கள் உங்கள் வாழ்க்கை போகும் போக்கை…
 
அடிக்கடி செல்ல முடியாதவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. உங்கள் வீட்டிலேயே குல தெய்வபடத்தை அலங்கரித்து, பாரம்பரிய, வழக்கமான படையலை வைத்து மனம் உருக வழிபாடு செய்யுங்கள். நிச்சயமாக உங்கள் குல தெய்வத்தின் அருளாசி உங்கள் குடும்பத்துக்கு கிடைக்கும்
 
வீட்டில் திருமணத்தடை , சந்தான பிராப்தி இன்மை இவை இருந்தால் குல தெய்வ வழிபாடு சரி செய்து விடும். சிலர் தவறாக புரிந்து கொள்வார்கள் - குலதெய்வத்தை வழிபடாத கோளாறுதான் இந்த தடைகள் என்று. ஆனால் அது அப்படியல்ல நமக்கு உள்ள கெட்ட நேரம்தான் இதற்கெல்லாம் காரணம். அதனை சரி செய்ய குலதெய்வம் அருள் புரியும். நமக்கு எதிரான அத்தனை துர் சக்திகளையும் அழிக்கும் வல்லமை உடையது. தன் பிள்ளைகளின் நலனுக்காக அத்தனை தெய்வத்திடமும் வேண்டுகோள் வைக்கும். அதனால்தான் நம் நல்வரவிற்காக வருடந்தோறும் காத்திருக்கும்.
 
நமக்கான தெய்வங்கள்
 

1.வீட்டு தெய்வம்

 
தங்களுக்குள் வழிகாட்டியாய் விளங்கி, வாழ்ந்து மறைந்த முன்னோர்களையோ, கன்னியாக இருந்த நிலையில் வாழ்ந்து மறைந்த பெண்களையோ, தங்களின் வீட்டுத் தெய்வமாக வழிபடும் மரபு காணப்படுகிறது. இது பெரும்பாலும் பெண் தெய்வமாகவே இருக்கும். இதனை வீட்டுச் சாமி, குடும்பத் தெய்வம், கன்னித் தெய்வம், வாழ்வரசி என்று கூறுவதுண்டு.
 

 2. குல தெய்வம்

 
ஒரு குறிப்பிட்ட மூதாதையின் மரபில் தோன்றியதன் வாயிலாக ஒருவருக்கொருவர் உறவு கொண்டுள்ள குழுவே ‘குலம்’ (clan) ஆகும். இரத்த உறவுடைய பங்காளிகள் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுவர். இவர்களுக்குள் திருமண உறவு நடைபெறாது. இவ்வாறு அமையும் ஒவ்வொரு குலத்திற்கும் தனித்தனித் தெய்வமும் கோயிலும் இருக்கும். இதுவே குலதெய்வம்என்றும் குலதெய்வக் கோயில் என்றும் குறிப்பிடப்படும். ‘குலதெய்வத்தை வணங்கினால் கோடி நன்மை உண்டு’, ‘குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்காதே’ என்ற பழமொழிகள் குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும். பூப்புச் சடங்கு, திருமணம், காதணி விழா அழைப்பிதழ்களில் குலதெய்வத்தின் பெயர் தவறாது இடம் பெறுவதை நீங்கள் காணலாம்.
 

3.  இன தெய்வம்

 
பல குலங்கள் சேர்ந்தது ஓர் இனம், ஒரு சாதி (caste) என்று கூறப்படும். ஒரு குறிப்பிட்ட சாதிக்கென்று உள்ள தெய்வங்கள் இனத்தெய்வங்கள், இனச்சார்புத் தெய்வங்கள், சாதி்த் தெய்வங்கள் என்ற பெயர்களில் வழங்கப் படுகின்றன. ஒரு குறிப்பிட்ட இனத்தாரின் தனித்துவத்தைக் காட்டும் வகையில் இத்தெய்வங்களின் வழிபாடுகள் சிறப்பாக அமையும். மிகுதியும் பெண் தெய்வங்களே இனத் தெய்வங்களாக இருக்கும். ஒரே மரபு வழிப்பட்ட குலத்தாரை ஒன்றிணைக்கும் சக்தியாக இனத் தெய்வங்கள் விளங்குகின்றன.
 

  4.ஊர் தெய்வம்

 
வீட்டைக் காப்பது வீட்டுத் தெய்வம், குலத்தைக் காப்பது குல தெய்வம், இனத்தாரைக் காப்பது இனத்தெய்வம் என்றாலும் ஓர் ஊரில் வாழும் மக்கள் அனைவரையும் காப்பது ஊர்த்தெய்வமே ஆகும். ஊர்ச் சாமி, ஊர்த் தேவதை, கிராம தேவதை, ஊர்க்காவல் தெய்வம் என்ற பெயர்களில் இவை குறிப்பிடப்படுகின்றன. ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து ஊர்த்தெய்வங்களுக்கு மிக விமரிசையாகப் பெரிய கும்பிடு நடத்துவர்.
தமிழகக் கிராமம் ஒன்றை நீங்கள் வலம் வந்தால் மேற்கூறிய தெய்வங்களை அடையாளம் காணலாம்.
 

  5.வெகுசன தெய்வங்கள்

 
சாதி, மதம், மொழி என்ற வேறுபாடில்லாமல் அனைவரும் சென்று வழிபடும் வகையில் அமைந்த சிறுதெய்வங்களே இங்கு வெகுசனத் தெய்வங்கள் என்ற பெயரில் விளக்கப்படுகின்றன. சிறுதெய்வ மரபிற்கும் பெருந்தெய்வ மரபிற்கும் இடைப்பட்ட ஒரு கலப்பு வழிபாட்டு மரபாக இவை வளர்ந்தும் வளர்த்தெடுக்கப் பட்டும் வருகின்றன.
 
 
ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. 
 
குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் நம் குலம் சிறப்பதோடு, குடும்பமும் மேன்மை பெறும். குல தெய்வங்கள் மனம் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிப்பதால், குடும்பங்கள் பல்வேறு துன்பங்கள், துயரங்கள், இடையூறுகளில் இருந்து காக்கப்படும்.
 
அண்ணன்-தம்பி குடும்பத்தினர் எல்லாரும் ஒற்றுமையாக நின்று படையல் போட்டு வழிபாடு செய்யும்போது குல தெய்வங்கள் மட்டுமின்றி மறைந்த மூதாதையர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். இதனால் பித்ருக்களின் பரிபூரண ஆசிகள் எளிதாக வந்து சேரும்
 
நம் முன்னோர்களால் வழிபடப்பட்ட குல தெய்வத்தின் அருள் நம் மீது பட்டால் துன்பங்கள் பறந்திடும். பல பிரச்சினைகளில் சிக்கி உழல்பவர்கள், பரிகாரம் போன்ற முயற்சிகளில் இறங்கும் முன் குலதெய்வத்தை நேரில் சென்று வழிபட்டு அதன் பின்னர் தொடங்கவும்.
 
குலதெய்வம் வழிபாட்டின் மூலம் மணமாகதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை வரம் பெறுவது, தீராத நோய்களுக்கு பரிகாரம் பெறுவது, கல்வி, தொழில் விருத்தி கிடைப்பது, வழக்குகளில் நீதி கிடைப்பது முதலிய பயன்கள் பெறப்படுகிறது.
 
அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது, அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம் இறை நிலையை அடைவது. ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களை அளிக்கிறது
 
 
எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் அவர்கள் தொடர்ந்து வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக் கணக்கு. ஏதாவது ஒரு கட்டத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தைப் பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும். ஆகவே ஒரு வம்சத்தின் குல தெய்வம் என்பது 13 ஜென்மத்துக்கு - வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும் என்று கூறுகிறார்கள்
 

குலதெய்வம்

 
ஒரு தெய்வம் என்பது இன்னொரு தெய்வத்திடம் இருந்து அதாவது பரமாத்மனிடம் இருந்து வந்ததுதான். அதாவது உலகெங்கும் பல்வேறு ரூபங்களில் பல்வேறு தரப்பினர் வணங்கும் தெய்வங்கள் அனைத்துமே பரமாத்மனிடம் இருந்து வந்தவையே ஆகும். முதலில் பரமாத்மன் படைத்தது மூன்றே தெய்வங்களைத்தான். அந்த முதல் நிலையில் உள்ளவர்கள் பிரும்மா, விஷ்ணு மற்றும் சிவபெருமான். அந்த பரமாத்மன் தனக்குத் தானே ஒரு ரூபம் தந்து அதை சிவபெருமானாகினார் என்றும் கூறுவார்கள். காரணம் பரமாத்மன் என்பது உருவமற்ற சிவனும்-பார்வதியும் இணைந்திருந்த சிவசக்தி ஸ்வரூபம் ஆகும். அந்த பரமாத்மனை பெண்ணினமாகவே கூறுவார்கள். காரணம் கருவுற்று குழந்தைகளைப் படைப்பது பெண்கள் என்பதினால் தெய்வங்களைப் படைத்த பெண்ணாக பரமாத்மனை கருதினார்கள்.
 
அப்படி படைக்கப்பட்ட ஒவ்வொருவரும் எண்ணவே முடியாத அளவில் கோடிக்கணக்கான உயிரணுக்களை தம்முள் கொண்டு படைக்கப்பட்டவர்கள். ஆகவே முதலில் படைக்கப்பட்ட மூவரும் தம்முள் இருந்த அணுக்களை தனது சார்ப்பிலே பல ரூபங்களில், பலவேறு உருவங்களில், பல்வேறு நிலைகளில் உருவாக்கி ஐந்து நிலை பிரபஞ்சத்திலே அனுப்பினார்கள். அவர்கள் மேலே தேவலோகத்திலே படைக்கப்பட்டு இருந்ததினால் கீழே இருந்த பூமி மற்றும் நான்கு திசைகளில் தம்முடைய அணுக்களை அனுப்பியதினால்தான் ஐந்து நிலை பிரபஞ்சத்திலே அனுப்பினார்கள் என்று கூறுகிறார்கள். இங்கு ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். தமது படைப்புக்குப் பின்னர் பிரும்மன் கோடி கோடியான ஜீவன்களைப் படைக்க, மற்ற இருவரும் அந்த ஜீவன்களைக் காக்கும் மற்றும் அழிக்கும் அவதாரங்களைப் படைத்தார்கள். அவர்களுக்கு பல்வேறு சக்திகளை தந்தார்கள். அவர்களது பணிகளை நிர்ணயித்தார்கள். இதனால்தான் தொண்ணூற்றி ஐந்துக்கும் அதிக சதவிகிதத்திலான தெய்வீக அவதாரங்கள் மற்றும் தேவதைகள் அனைவருமே விஷ்ணு அல்லது சிவபெருமானின் வழிமுறையை சார்ந்தவர்களாகவே காணப்படுகிறார்கள்..
 
அதனால் மூவரில் அந்த இருவருக்கு மட்டுமே இந்த பிரபஞ்சத்தில் ஐந்து நிலைகளிலும் பல லட்சக்கணக்கான அவதாரங்கள் இருக்க பிரும்மனுக்கு மட்டும் மிக மிகக் குறைந்த அளவிலேயே அவதார ரூப கணங்கள் இருந்தன. அதனால்தான் பிரும்மாவை வேண்டிக் கொண்டு செய்யப்படும் விரதங்களும் நியமங்களும் அபூர்வமாகவே காணப்படுகின்றன. பிரும்மாவினால் படைப்பைக் கொடுக்க முடிந்தது, அவரை வேண்டித் தவம் இருந்தவர்களுக்கு அழிவற்ற நிலை என்ற அளவு அருள் புரிய முடிந்தது. ஆனால் சிவபெருமானைப் போலவும், விஷ்ணுவைப் போலவும் பல்வேறு ரூபங்களை எடுத்து அசுரர்களையும், ராக்ஷசர்களையும், அரக்கர்களையும் நேரடியாக களத்தில் இறங்கி அவர்களை அழித்ததான புராணங்கள் அல்லது வரலாறுகள் எதுவுமே இல்லை. அதன் காரணம் பின்னர் பிரும்மா சாபம் பெற்று பிரபஞ்சத்திலே மக்களால் பூஜிக்கப்படாத கடவுளாக இருப்பார் என்பது முடிவாகி இருந்ததினால்தான் இந்த நிலை இருந்துள்ளது. பிரும்மா கோடி கோடியான ஜீவன்களைப் படைத்தப் பின் விஷ்ணுவும், சிவபெருமானும் அனுப்பிய அவதாரங்களும், ரூபங்களும் கண்களுக்குப் புலப்படாத வகையில் இருந்து கொண்டு பிரும்மனால் படைக்கப்பட்ட உயிரினங்களை காப்பற்றுவதற்காக பிரபஞ்சத்தில் உலவி வரலாயின.
 
இப்படியாக சிவபெருமான் மற்றும் விஷ்ணுவினால் படைக்கப்பட்ட பல அவதாரங்களில் ஒன்றாகவே குல தெய்வமும் அடங்கும். அந்த ஐந்து நிலைகளில் காணப்படும் ஒரு வம்சத்தின் குல தெய்வம் என்பது எந்த நிலையில் வேண்டுமானாலும் இருக்கும். அவ்வளவு ஏன் துர்தேவதைகள் கூட அந்த அவதாரங்களில் உள்ளன. அவையும் சில காரண காரியங்களுக்காகவே படைக்கப்பட்டுள்ளன. அது சரி அதென்ன குல தெய்வம் என்ற பெயர் ? ஐந்து நிலைகளில் உள்ள தெய்வீக ரூபங்களில் குல தெய்வம் என்பது என்ன பிரிவு??
 
பிரும்மன் படைத்த உயிரினங்களைக் காக்க விஷ்ணுவும், சிவபெருமானும் பலவேறு அவதாரங்களையும், ரூபங்களையும் படைத்தார்கள் என்று கூறினேன் அல்லவா. அந்த உயிரினங்களைப் படைத்தப் பின் அவற்றை கோடிக்கணக்கான பல்வேறு பிரிவுகளாக பிரித்து உலகின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு குணங்களுடன் படைப்புக் கொடுத்தார். அந்த பல்வேறு குனங்களுடம், பலவேறு இடங்களிலும் பரவிக் கிடந்த படைப்புக்களை பாதுகாக்க, வழிப்படுத்த வேண்டும் என்பதை முன்னரே பரமாத்மன் முடிவு செய்து இருந்ததினால்தான் விஷ்ணு மற்றும் சிவபெருமானின் மூல அவதாரங்கள் மூலம் கோடிக்கணக்கான துணை அவதாரங்களை படைக்க வழி செய்யப்பட்டு இருந்தது. அவர்களால் அப்படியாக படைக்கப்படும் ஒவ்வொரு அவதாரத்துக்கும் சில பொறுப்புக்களும் அதிகாரங்களும் தரப்பட்டது. அவர்கள் பிரும்மாவினால் படைக்கப்பட்டு கோடிக்கணக்கான பிரிவுகளில் இருந்த ஒவ்வொரு பிரிவையும் பாதுகாத்து வழிகாட்டும் பொறுப்புக்களைப் பெற்றது.
 
பிரும்மாவினால் படைக்கப்பட்ட ஒவ்வொரு ஜீவனும் 13 ஜென்ம காலங்களைக் கொண்டு படைக்கப்பட்டு உள்ளது. படைப்பின் தத்துவப்படி ஒரு ஆத்மாவின் 13 ஜென்ம காலம் எனப்படுவது சுமார் 781 ஆண்டுகளைக் கொண்டதாம். ஒவ்வொரு ஆத்மாவும் படைக்கப்பட்டவுடன் அதை நல்வழிப்படுத்தி பாதுகாக்க எந்தெந்த தேவதை அல்லது தெய்வங்களுக்கு அதிகாரம் தரப்பட்டு இருந்ததோ அந்த தெய்வங்களும், தேவதைகளும் அந்த ஆத்மாக்களை தம்முடன் இணைத்துக் கொண்டு விடுவதினால் அந்த அந்த தெய்வத்தையே காக்கும் கடவுளாக அந்த ஆத்மாவும் ஏற்றுக் கொண்டு விடுகிறது. அதுவே அந்த ஜீவனின் குல தெய்வமாகி விடுகிறது. அந்த ஜீவனை சார்ந்த அனைத்து ஜீவனுக்கும் வம்சாவளியாக அதே தெய்வமும், தேவதையும் குல தெய்வமாகி விடுகிறது. இப்படியாக அமைந்ததே குல தெய்வம் என்பது. அவரவர் தமது குல தெய்வத்தை வணங்க வேண்டும் என்று இதனால்தான் கூறப்படுகிறது....
 
ஒரு ஆத்மாவானது ஜனனம் எடுத்தப் பின் அவர்கள் தங்கி உள்ள இடங்களில் ஏதாவது ஒரு காரணத்தினால் உந்தப்பட்டு தமக்கு பாதுகாப்பைத் தர அவர்கள் மனதில் தோன்றும் தெய்வம், தேவதை அல்லது ஏதாவது ஒரு உருவத்தை மானசீகமாக வணங்கத்துவங்குவார்கள். இந்த செயலும் தெய்வ நிர்ணயித்தின்படியே நடைபெறத் துவங்குகிறது. அதுவே அவர்களது குல தெய்வமாகி விடும். இப்படியாக துவங்கும் அந்த குல தெய்வ வழிபாடு என்பது அவர்கள் குடும்பத்தில் துவங்கி அவர்கள் மூலம் அவர்களது வம்சத்தில் 
 
ஒரு வம்சம் என்பது எத்தனை ஆண்டுகள் அல்லது எத்தனை குடும்பத்தினர்வரை பொருந்தும்? ஒருவருக்கு பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன் என ஆண் குழந்தை மட்டுமே ஒரு வம்ச கணக்கில் வரும். ஒருவருடைய சராசரி வயது 50 என்றால் கூட அவருடைய தாத்தாவின், தாத்தாவின் பெரும் தாத்தாவின் காலம் என 13 ஜென்மங்களுக்கு முந்தய காலம் எனக் கணக்கிட்டால் கூட 13 x 50 = 650 ஆண்டுகள் என வரும். நம்மில் யாருக்காவது 650 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சந்ததியினர் யார் என்பது தெரியுமா? யாருக்காவது அவர்களுடைய குடும்பத்தில் 13 ஆம் வம்சத்தின் பெரிய தாத்தா யார் என்பது தெரியுமா? இதையெல்லாம் யார் குறித்து வைத்துக் கொண்டு வருகிறார்கள்? அதனால்தான் ஒரு குல தெய்வம் ஏழேழு ஜென்மம் அதாவது 49 ஜென்மங்களுக்கு அதாவது 13 ஜென்ம காலத்துக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும் என்ற வார்த்தை வந்தது. மகள் என்பவள் திருமணம் ஆனதும் புகுந்த வீட்டிற்குச் சென்று விடுவதினால் அவளுக்கு தாய்-தந்தையின் குல தெய்வத்தை தனது குல தெய்வமாக ஏற்க பாத்யதை இல்லை. அவள் புகுந்த வீட்டின் குலதெய்வமே அவள் குல தெய்வம் ஆகி விடும்.
 
 
எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் அவர்கள் தொடர்ந்து வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக் கணக்கு. ஏதாவது ஒரு கட்டத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தைப் பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும். ஆகவே ஒரு வம்சத்தின் குல தெய்வம் என்பது 13 ஜென்மத்துக்கு - வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும் என்று கூறுகிறார்கள்.

Sunday, 19 November 2017

நட்சத்திரங்களுக்கான பொதுவான குணங்கள்

அசுவினி:

இந்த நக்ஷத்திரக் கூட்டம் குதிரை முக வடிவில் அமையும். ஆறு நக்ஷத்திரங்களைக் குறிக்கும் இது மேஷ ராசியில் அமையும். இந்த நக்ஷத்திரத்தை ஆளும் கிரகம் கேது. ராசிக்குரிய கிரகம் செவ்வாய்.
பொதுவான குணங்கள்:
புத்தி கூர்மை, வடிவான தோற்றம், ஆடை ஆபரணங்கள் அணிவதில் ஆசை, பாசம், நேசம், கோபதாபங்கள். உணர்ச்சிவசப்படுதல், தன்னம்பிக்கை, துணிச்சல், தர்ம சிந்தனை, பயமின்மை, எதையும் வேகமாகச் சிந்தித்து வேகமாகச் செயல்படுதல், தற்பெருமை, கர்வம், தவறான முடிவெடுத்தல் – சாதிக்கும் தன்மை, பிடிவாதம் போன்றவை.
அசுவினி முதல் பாதம்: (இது செவ்வாய் கிரகத்தின் அம்சம்)
குடும்பப் பற்று, போர் வீரனைப் போன்ற வீரம், முரட்டுப் பிடிவாதம், அபாரமான தன்னம்பிக்கை, பொருள்களிடமும் பெண்களிடமும் விருப்பம், எல்லாவற்றையும் அனுபவித்து வாழ வேண்டும் என்ற ஆசை போன்றவை இதற்குரிய குணங்கள்.
அசுவினி 2-ம் பாதம்: (சுக்ரனின் அம்சம்)
கலையில் ஈடுபாடு, பணம் சேர்ப்பதில் ஆர்வம், சிற்றின்ப ஈடுபாடு, புகழில் விருப்பம் போன்ற குணங்கள் இருக்கும்.
அசுவினி 3-ம் பாதம்: (புதனின் அம்சம்)
கல்வி, தெய்வ பக்தி, ஆன்மிக ஈடுபாடு, உடல் சுகம், சாமர்த்தியம், தலைமை தாங்கும் திறமை இதற்குரிய தனிக் குணங்கள்.
அசுவனி 4-ம் பாதம்: (இந்தப் பாதத்திற்கு சந்திரன் அதிபதி) உணர்ச்சிவசப்பட்டு வாழ்பவர், தார்மிகச் சிந்தனை உள்ளவர், திறமையும், நேர்மையும் உள்ளவர்கள் இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள்.
பரணி
விஷ்ணுவின் திருநாமத்தைப் போல அமைந்த 3 நக்ஷத்திரக் கூட்டம் இது. இதுவும் மேஷ ராசியில் அமைகிறது. ‘பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வார்’ என்ற பழமொழி உண்டு. உலகாளும் மன்னனாக இல்லாவிட்டாலும், சுகபோக வாழ்க்கை வாழ்பவராக இருப்பார்கள் இவர்கள்.
இந்த ராசி நாதன் செவ்வாய். இந்த நக்ஷத்திர அதிபதி – சுக்கிரன்
பொதுவான குணங்கள்:
வசீகரமான தோற்றம், உயர்வாக வாழத் துடிப்பு, சுகபோகத்தை அனுபவிக்க விருப்பம், சுயநலம், தோல்வியைத் தாங்கமுடியாத பயம், பாசமும் நேசமும் உள்ள பண்பு ஆகியவை இந்த நக்ஷத்திரத்துக்குரிய பொதுவான குணங்கள்.
பரணி முதல் பாதம்: (இது சூரியனின் அம்சம்)
அழகு, சுகபோகத்தில் பிரியம், எல்லாம் தெரிந்ததாக எண்ணம், நல்ல பேச்சுத் திறமை, எதையும் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் சாமர்த்தியம், கோபதாபம், பொறுமையில்லாத குணம் ஆகியவை முக்கிய இயல்புகள்.
பரணி 2-ம் பாதம்: (இது புதனின் அம்சம்)
குடும்ப வாழ்க்கையில் பற்று, பணம் சேர்ப்பதில் விருப்பம், ஆடை அணிகலன்களில் ஆசை, இசை ஆர்வம், திருப்தியில்லாத மனப்பான்மை ஆகியவை இந்தப் பாதத்தில் பிறந்தவர்களின் குண இயல்புகள்.
பரணி 3-ம் பாதம்: (சுக்கிரன் இதன் அம்சம்)
உற்சாகம், மகிழ்ச்சி, புத்திகூர்மை, அபார ஞாபக சக்தி, ஜெயிக்கும் எண்ணம், பிறரை நம்பாத தன்மை போன்றவை இயல்புகளாக அமையும்.
பரணி 4-ம் பாதம்: (செவ்வாயின் அம்சம்)
தலைமை தாங்கும் தன்மை, அலங்காரத்திலும் ஆடம்பரத்திலும் விருப்பம், சலனமான சிந்தனை, சுயமாக முடிவெடுக்க முடியாத தயக்கம், பொறாமை, நன்றி இன்மை போன்றவை.
கிருத்திகை:
கத்தி போல் அமைந்துள்ள 6 நக்ஷத்திரக் கூட்டங்கள் இவை. முருகப் பெருமானுக்கு உகந்த நக்ஷத்திரம் இது. இதன் முதல் பாதம் மேஷராசியிலும், மற்ற மூன்று பாதங்களும் ரிஷப ராசியிலும் அமையும். இந்த நக்ஷத்திரத்தை அக்னி சம்பந்தமான நக்ஷத்திரம் என்றும் சொல்லுவார்கள். இந்த ராசிநாதன் செவ்வாய் அல்லது சுக்கிரன். நக்ஷத்திர அதிபதி சூரியன்.
பொதுவான குணங்கள்:
மகிழ்ச்சியை விரும்புபவர்கள், நேசமும் நட்பும் உள்ளவர்கள், உயரிய கொள்கைகள் உள்ளவர்கள், நல்ல தோற்றம் உள்ளவர்கள், சட்டென கோபம் வருவதும் வந்த கோபம் உடனே மறைவதும் இவர்களின் இயல்பு. நல்ல நண்பர்கள். நேர்மையான எதிரிகள். எதைச் செய்தாகிலும் நினைத்ததைச் சாதிக்கும் எண்ணம் இருக்கும். சுதந்திரமானவர்கள். பிடிவாத சுபாவம் இருக்கும். ஆணவமும், கர்வமும் இருக்கும்.
கிருத்திகை முதல் பாதம்:
இது குருவின் அம்சம் கொண்டது. இதில் பிறந்தவர்கள் செல்வத்தை விரும்புபவர்கள். நல்ல ஞானம் உள்ளவர்கள். தந்திரத்தால் வெல்பவர்கள். சுய கௌரவம் மிக்கவர். புகழை விரும்புபவர்கள்.
கிருத்திகை 2-ம் பாதம்:
இந்தப் பாதத்திற்கு சனி பகவானின் அம்சம் உண்டு. இதில் பிறந்தவர்கள் ஆசை, பாசம், பற்றுள்ளவர்கள். உயரிய நோக்கங்களை அடையப் போராடுபவர்கள். வீரம் மிக்கவர்கள், தற்பெருமை கொள்பவர்கள்.
கிருத்திகை 3-ம் பாதம்:
இதுவும் சனி பகவானின் அம்சமுடையது. இதில் பிறந்தவர்களுக்குப் பேராசை, பணவெறி, எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற விடாமுயற்சி, கோபம், பொறாமை, பழிவாங்கும் இயல்பு போன்றவை இருக்கும்.
கிருத்திகை 4-ம் பாதம்:
இது குருவின் ஆதிக்கம் உடையது. அடக்கம், ஒழுக்கம், நட்பு, பாசம் போன்ற நல்ல இயல்புகள் இதில் அடங்கும். தர்ம சிந்தனையும், இரக்க குணமும், தெய்வ பக்தியும் இந்தப் பாதத்தில் பிறந்தவர்களின் சிறப்பு அம்சங்கள்.
ரோகிணி:
தேர் வடிவில் அமைந்த 5 நக்ஷத்திரங் களின் கூட்டம் இது. ரிஷப ராசியில் சேரும் நக்ஷத்திரம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் இந்த நக்ஷத்திரத்தில்தான் அவதரித்தார். இது ஒரு சிரேஷ்டமான நக்ஷத்திரம். இதன் ராசிநாதன் சுக்ரன், நக்ஷத்திர அதிபதி சந்திரன்.
பொதுவான குணங்கள்:
இதில் பிறந்தவர்கள் சுதந்திரமானவர்கள். சுயமாகச் சிந்தித்து முடிவெடுப்பவர்கள். பாசமுள்ளவர்கள். நேர்மையானவர்கள், சௌகர்யம், சௌபாக்யம் இரண்டிலும் ஆசை உள்ளவர்கள், தலைமை தாங்கும் திறமை, கோபதாபம் உள்ளவர்கள். பொதுவாக நல்லவர்கள். பிறர் நலம் விரும்புபவர்கள். மற்றவர்களைச் சார்ந்து வாழ்பவர்கள்.
ரோகிணி முதல் பாதம்:
செவ்வாய் இதன் அதிபதி. இதற்கு உரியவர்கள் கொஞ்சம் மன உறுதி இல்லாதவர்கள். எதிலும் ஈடுபாடும், தோல்வியில் துவளும் இயல்பும் உண்டு. நல்ல தோற்றப் பொலிவு இருக்கும். இவர்களுக்கு காவல்துறை, ராணுவம் போன்ற துறையில் விருப்பம் இருக்கும்.
ரோகிணி 2-ம் பாதம்:
இதற்கு அதிபதி சுக்ரன். இதற்கு உரியவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக, செல்வச்செழிப்புடன் வாழ விரும்புபவர்கள். அவற்றை அடைய முயற்சி செய்பவர்கள். தர்ம சிந்தை, இரக்க குணம், பொது நலத்தில் ஈடுபாடு இவர்களிடம் இருக்கும். எதையும் எளிதில் விரும்புவார்கள். விரும்பியது கிடைக்காவிட்டால் பெரும் துன்பம் அடைவார்கள்.
ரோகிணி 3-ம் பாதம்:
இதன் அதிபதி புதன். புத்தி கூர்மை, அறிவாற்றல், உயர்ந்த கல்வி பெறும் ஆசை, கலைகளில் ஈடுபாடு ஆகியவை இந்தப் பாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும். இவர்கள் சாதுர்யமானவர்கள். சமர்த்தர்கள். கவிதை, காவியம், ஆன்மிகம் போன்றவற்றில் ஈடுபாடு இருக்கும்.
ரோகிணி 4-ம் பாதம்:
இதற்கு அதிபதி சந்திரன். இந்த பாதத்தில் பிறந்தவர்கள், உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். மனம் விரும்புவதை அடைவது இவர்கள் நோக்கமாக இருக்கும். நல்லவர்கள், பிறர் நலம் கருதுபவர்கள், குடும்பப் பற்றுள்ளவர்கள், ஆசாபாசம் மிக்கவர்கள். பொறுமையாக இருந்து எதையும் சாதிக்க விரும்புபவர்கள்.
இதைத் தொடர்ந்து வரும் நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களுக்குரிய குணாதிசயங்களை அடுத்தடுத்த அத்தியாயங்களில் அறிந்துகொள்வோம்.
மிருகசீரிடம்:
ம்ருக என்றால் மான்; சீர்ஷம் என்றால் சிரசு அல்லது தலை. தமிழின் ஆயுத எழுத்தான ஃ போல மூன்று நட்சத்திரங்கள் இதில் அடங்கும். மானின் தலைபோலத் தோற்றமளிப்பதால் மிருகசீர்ஷம் எனப் பெயர் பெற்றது.
பொதுவான குணங்கள்:
எப்பொழுதும் இளமையாக இருப்பவர்கள், உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பவர்கள், புத்திக்கூர்மை, அளவுகடந்த ஊக்கம், பேச்சுத்திறமை உள்ளவர்கள். அன்பு, நட்பு, பாசம் உள்ளவர்கள். தனக்கென ஒரு தனிவழியைத் தேர்ந்தெடுத்து நடப்பவர்கள். உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். சுதந்திரமானவர்கள்
ராசி
மிருகசீரிட நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் ரிஷப ராசியிலும், 3,4 பாதங்கள் மிதுன ராசியிலும் அமையும். எனவே, இந்த ராசி அதிபதிகள் சுக்கிரனும் புதனும் ஆவர்.
நான்கு பாதங்களின் குணங்கள்:
முதல் பாதம்:
இந்தப் பாதத்தை ஆளும் கிரகம் சூரியன். அபார தன்னம்பிக்கை, துணிச்சல், எல்லாம் தெரியும் என்ற கர்வம், முடியாத செயல்களையும் முடியும் எனக் கருதி எடுத்துக்கொள்ளும் ஆற்றல், விளம்பரப் பிரியம் போன்ற குணங்கள் இருக்கும்.
இரண்டாம் பாதம்:
இந்தப் பாதத்தை ஆள்பவர் புதன். இவர்களிடம் நல்ல கல்வியறிவும் தெய்வ பக்தியும் இருக்கும். முன்கோபமும், உணர்ச்சிவசப்படும் தன்மையும் இருக்கும். வாழ்க்கையில் எல்லாவற்றையும் ரசித்து நடப்பவர்கள்.
மூன்றாம் பாதம்:
சுக்கிரனின் அம்சம். வசீகரமான தோற்றம், ஆடை அணிகலன்களில் ஆசை, அன்பு, காதல், பாசம் போன்ற உணர்வுகள் உண்டு.
நான்காம் பாதம்:
இதன் அதிபதி செவ்வாய். ஆசை, காதல், பாசம் மேலோங்கி இருக்கும். எதையும் துணிச்சலாகச் செய்பவர்கள். பிடிவாதமும் கோபமும் இருக்கும். எதையும் தேவைக்கு அதிகமாக விரும்புபவர்கள்; விரும்பியதைச் செய்பவர்கள். அதனால் பிரச்னைகளை உண்டாக்கிக் கொள்பவர்கள்.
திருவாதிரை:
இது மிதுன ராசியில் அடங்கும். இது ஒரே ஒரு நட்சத்திரம் தான். இதனை ஒரு விளக்கு அல்லது கண் விழிபோலக் கருதலாம். ‘சிவபெருமானின் ஒரு அம்சமான நடராஜப் பெருமான் அவதரித்த நட்சத்திரம்’ இது என்பார்கள். மார்கழி மாதம், திருவாதிரை அன்று சிவாலயங்களில் நடராஜப் பெருமானின் தரிசனமே ஆருத்ரா தரிசனம் எனப்படுகிறது.
பொதுவான குணங்கள்:
நல்ல தோற்றம், அழகு, உடல் வலிமை உள்ளவர்கள். திடசித்தமும், எடுத்ததை முடிக்கும் ஆற்றலும் இருக்கும். இரக்கம், தயாள குணம், தர்ம சிந்தனை, பிறருக்கு உதவும் தன்மை இருக்கும். மனதில் பட்டதை வெளிப்படையாகச் சொல்பவர்கள். கோப தாபம் இருக்கும். அவசரப்பட்டுச் செயல்களைச் செய்வார்கள். தவறு நேர்ந்தால், திருத்திக் கொள்வார்கள்.
முதல் பாதம்:
இந்தப் பாதத்தை ஆள்பவர் குரு பகவான். இவர்களிடம் ஞானம், உயர்கல்வி, தர்ம சிந்தை இருக்கும். ‘கோபம் இருக்குமிடம் குணமும் இருக்கும்’ என்பார்கள். இவர்களிடம் கோபமும் குணமும் சேர்ந்தே இருக்கும்.
இரண்டாம் பாதம்:
சனிபகவான் ஆளும் இந்த நட்சத்திரத்தின் 2-ம் பாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் சமர்த்தர்கள். எல்லோரையும் அடக்கியாள நினைப்பவர்கள். பிடிவாதம் கொண்டவர்கள். பிறரைத் துன்புறுத்தியாவது தான் பலனடைய வேண்டும் என்ற சுயநலம் மிக்கவர்கள். நல்லவர்களின் சேர்க்கையும், நல்ல குருவின் வழிகாட்டுதலும் இருந்தால் இவர்கள் நல்லவர்கள் ஆகமுடியும்.
மூன்றாம் பாதம்:
இதனை ஆள்பவர் சனி. இவர்கள் முரட்டுப் பிடிவாதம் உள்ளவர்கள். தான் விரும்பியது சரியா தவறா என்று சிந்திக்காமல் அதை அடைய முயற்சிப்பவர்கள். எப்படியேனும் பொருள் ஈட்டி, பிறரை அடக்கியாள விரும்புபவர்கள். புகழை விரும்பி தானதர்மம் செய்பவர்கள். ஆத்திரப்பட்டு எதனையும் செய்துவிட்டு, பிறகு அதற்காக வருத்தப்படுபவர்கள். அவசரப்பட்டுத் தவறான முடிவை எடுத்துவிட்டுத் தோல்வியைச் சந்திப்பவர்கள்.
நான்காம் பாதம்:
இதன் தலைவர் குருபகவான். இவர்களிடம் பக்தியும், தர்ம சிந்தனையும் இருக்கும். பொதுவாழ்வில் ஈடுபட்டுப் பிறருக்கு சேவை செய்யும் ஆர்வம் உள்ளவர்கள். அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கிலும் நாட்டம் உள்ளவர்கள்.
புனர்பூசம்:
இதனை புனர்வஸு என்றும் சொல்வார்கள். ‘புனர்’ என்றால் ‘மீண்டும்’ என்று பொருள். ‘வஸு’ என்பது ‘சிறப்பு’ அல்லது ‘நல்லது’ என்பதைக் குறிக்கும். ‘மீண்டும் சிறப்பு’ என்பதே இந்த நட்சத்திரத்தின் பொருள். பகவான் ஸ்ரீவிஷ்ணு ராமனாக அவதரித்தது இந்த நட்சத்திரத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவான குணங்கள்:
தெளிவான அறிவு, பற்று, பாசம், நேர்மை, நியாய உணர்வு, தயாள குணம், பொறுமை போன்ற உயரிய குணங்கள் இவர்களுக்கு உரியது. நல்லதையே நினைத்து நல்லதையே செய்பவர்கள். பிறர் நலம் நாடுபவர்கள். ஆன்மிகத் துறையிலும், பொதுச் சேவையிலும் ஈடுபாடு கொண்டவர்கள் பலர் இந்த நட்சத்திரக்காரர்களாக இருப்பார்கள்.
முதல் பாதம்:
இதன் தலைவர் செவ்வாய். பாசமும் கோபமும் இவர்களது சுபாவமாக அமையும். ஒழுக்கம் உள்ளவர்கள். சொன்னதைச் செய்பவர்கள். பிறரோடு உரையாடுவதில் சமர்த்தர்கள்.
இரண்டாம் பாதம்:
சுக்கிரன் ஆளும் இந்தப் பாதத்துக்கு உரியவர்கள் சுக போகங்களை விரும்புபவர்கள். பிறர் நலத்தில் நாட்டம் கொண்டவர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுபவர்கள். தெய்வ பக்தி உள்ளவர்கள்.
மூன்றாம் பாதம்:
புனர்பூசம் 3-ம் பாதம் புதனுக்கு உரியது. இதில் பிறந்தவர்கள் புத்திக்கூர்மை, கடுமையான உழைப்பு, ஒழுக்கம், தெய்வ பக்தி, சேவை செய்யும் மனப்பான்மை போன்ற உயர்ந்த குணமுடையவர்கள். நீண்ட ஆயுள் இருந்தாலும், எப்போதும் உடல் நலக் குறைவும், மன இறுக்கமும் இருக்கும்.
நான்காம் பாதம்:
சந்திரன் இதன் அதிபதி. வாழ்க்கைத் தேவைகளில் விருப்பமும் ஆசையும் கொண்டவர்கள். நல்ல தோற்றமும் அழகும் உள்ளவர்கள். அறிவைப் பயன்படுத்தி வெற்றி பெறத் தெரிந்தவர்கள்.
பூசம்:
இதனை புஷ்யம் என்றும் குறிப்பிடுவார்கள். சமஸ்கிருதத்தில் ‘புஷ்டி’ என்றால் ‘பலம்’ என்று பொருள். அதிலிருந்து மருவியது புஷ்யம். மூன்று நட்சத்திரங்கள் புடலங்காய் போலத் தோற்றமளிக்கும். 27 நட்சத்திரங்களில், சிறப்பு வாய்ந்த சில நட்சத்திரங்களில் பூசமும் ஒன்று!
பொதுவான குணங்கள்:
பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திறமைசாலிகள். புத்திக்கூர்மை உள்ளவர்கள். எதையும் எளிதில் கிரகித்துக்கொள்ளக்கூடியவர்கள். சுதந்திரமாக வாழ நினைப்பவர்கள். அடக்கமானவர்கள். அதே நேரம், ஆத்திரமும் கோபமும் உள்ளவர்கள்.
முதல் பாதம்:
சூரிய பகவான் இதன் அம்சம். எடுத்த காரியத்தை முடிக்கும் ஆற்றல், கொள்கைப் பிடிப்பு, நியாய உணர்வு, நேர்மை, ஒழுக்கம் ஆகிய இயல்புகள் உள்ளவர்கள். தலைமை தாங்கும் இயல்பு, வித்தியாசமாகச் சிந்திக்கும் திறமை, கலையுணர்வு ஆகியவையும் உள்ளவர்கள்.
இரண்டாம் பாதம்:
இதனை ஆள்பவர் புதன். அழகிய தோற்றம், அன்பு, பண்பு, வைராக்யம், ஆசை, பாசம் உள்ளவர்கள். கோபமும் குணமும் சேர்ந்திருப்பவர்கள்.
மூன்றாம் பாதம்:
சுக்கிரன் இதன் அதிபதி. பிடிவாதம், நினைத்ததை முடிக்கும் ஆற்றல், கடுமையான உழைப்பு, பிறரை வழிநடத்திச் செல்லும் ஆற்றல், ஆன்மிகத்தில் ஈடுபாடு, தெய்வ பக்தி ஆகியவை இவர்களின் குணங்கள்.
நான்காம் பாதம்:
செவ்வாயின் ஆட்சி அமைபவர்கள். பேராசை, பொருளீட்டுவதில் ஆர்வம், சுகபோகங்களில் ஈடுபாடு உள்ளவர்கள். தாங்கள் ஜெயிப்பதற்காகத் தவறான வழிகளையும் பயன்படுத்தக்கூடியவர்கள்; சுயநலவாதிகள்.
ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், சித்திரை, சுவாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களின் குணாதிசயங்களை அடுத்த இதழில் காண்போம்.
ஆயில்யம்:
பாம்பின் வடிவில் தோற்றமளிக்கும் ஆறு நட்சத்திரக் கூட்டம் ஆஸ்லேஷா அல்லது ஆயில்யம் எனப்படுகிறது. இது கடக ராசி நட்சத்திரம். இதன் தேவதை ‘நாகம்’ என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவான குணங்கள்:
திறமையானவர்கள். ஆதிக்கம் செலுத்தக்கூடியவர்கள். மனம் விரும்பியவண்ணம் வாழ நினைப்பவர்கள். தாங்கள் விரும்பியதை அடைய முயல்பவர்கள். கடுமையான சொல் பேசுபவர்கள். மாந்த்ரீகம், தாந்த்ரீகம் போன்றவற்றில் ஈடுபாடு உள்ளவர்கள்.
முதல் பாதம்:
இது குருவின் அம்சம். தைரியசாலிகள். புத்திக்கூர்மையும், ஆராய்ச்சி செய்து புதியன கண்டுபிடிப்பதில் ஈடுபாடும் உள்ளவர்கள். கோபமும் இருக்கும்; குணமும் இருக்கும். புகழ்ச்சியை விரும்புபவர்கள்.
இரண்டாம் பாதம்:
இதன் அதிபதி சனி பகவான். இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள் சுகபோகங்களை அனுபவிக்க ஆசைப்படுபவர்கள். அதற்காக எதையும், எப்படியும் பெற முயல்பவர்கள். அநியாயத்தையும் தவறுகளையும் நியாயப்படுத்துவார்கள்.
மூன்றாம் பாதம்:
இதன் அதிபதியும் சனி பகவான்தான். இவர்கள் அடிக்கடி கோபப்படுபவர்கள். எந்த வழியிலாவது செல்வத்தை அடைய முயற்சிப்பவர்கள். தங்களைத் தாங்களே புகழ்ந்துகொள்பவர்கள். பிறருடைய அறிவுரையைக் கேட்கமாட்டார்கள்.
நான்காம் பாதம்:
இதன் அதிபதி குரு பகவான். இவர்கள் புத்திசாலிகள். ஆனால் சோம்பேறிகள். கடுமையாக உழைக்க விருப்பமில்லாதவர்கள். குழந்தைப் பருவத்தில் கஷ்டப்படுபவர்கள். எதிர்மறையாகச் சிந்திப்பவர்கள்; திட்டமிடாமல் செயல்படுபவர்கள். ஆயில்யம் 4-ம் பாதத்தில் குழந்தைகள் பிறந்தால், பெற்றோர்களுக்கு ஏதாவது கஷ்டம் வரும் என்பதால், இந்த நட்சத்திரத்துக்கு உரிய ‘சந்திர சாந்தி’ எனும் பூஜை செய்வது சம்பிரதாயமான பரிகாரம்.
மகம்:
இது ஐந்து நட்சத்திரங்கள் கொண்ட கூட்டம். ஒரு பல்லக்கு வடிவில் தோற்றமளிப்பது, மக நட்சத்திரக் கூட்டம். ‘மகத்தில் பிறந்தவர்கள் ஜகத்தை ஆள்வார்கள்’ என்று ஒரு பழமொழி உண்டு. ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி, இந்தப் பழமொழிகளை மட்டுமே நம்பி நட்சத்திரப் பலன்களைக் கூறக்கூடாது. ஒருவரது ஜாதகத்தில் எந்தெந்த கிரகங்கள் ஆட்சி, உச்சமாக இருக்கின்றன என்பதையும், எந்த கிரகங்கள் பகை அல்லது நீசமாக இருக்கின்றன என்பதையும் வைத்தே பலன்கள் கூற வேண்டும். மகத்தில் பிறந்து ஜகத்தை ஆண்டவர்களும் உண்டு; நாடு நகரம் துறந்து வீதிக்கு வந்து திண்டாடியவர்களும் உண்டு. சிம்ம ராசியைச் சேர்ந்த இந்த நட்சத்திரத்தின் ராசி அதிபதி சூரியன்.
பொதுவான குணங்கள்:
கலைத்திறமை உள்ளவர்கள். தலைமை தாங்கும் இயல்புகளும், விருப்பமும் கொண்டவர்கள். கோபம், ஆத்திரம், பிடிவாதம், ஜெயிக்கவேண்டும் என்ற லட்சியம் ஆகியவை இந்த நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள். புகழுக்காக எதையும் இழக்கத் துணிந்தவர்கள். மனத்தில் பட்டதை வெளிப்படையாகப் பேசுபவர்கள். சிறந்த பேச்சாளிகள், வாதத் திறமை மிக்கவர்கள். பொருள்களிடமும் புருஷர்களிடமும் ஆசையும் பாசமும் மிக்கவர்கள். தோல்வியை இவர்களால் தாங்க முடியாது.
முதல் பாதம்:
இதன் அதிபதி செவ்வாய். பூமி, நிலபுலன்கள் சேர்ப்பதில் ஆசை உள்ளவர்கள். நல்ல தோற்றம் உள்ளவர்கள். பிறரை வசீகரிக்கும் குணங்கள் உள்ளவர்கள். குடும்பத்தை நேசிப்பவர்கள். சொத்து சுகங்களில் பற்றுள்ளவர்கள். உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்.
இரண்டாம் பாதம்:
இதற்கு உரிய கிரகம் சுக்கிரன். ஆசாபாசங்கள் மிகுந்தவர்கள். இரக்க குணமும், பிறருக்கு உதவும் தன்மையும் இவர்களிடம் இருக்கும். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் பற்றும் பாசமும் கொண்டவர்கள். இசை, நடனம், நாடகம், தகவல் தொடர்பு ஆகிய துறைகளில் திறமையும், ஈடுபாடும் மிக்கவர்கள். ஆத்திரம் இருக்கும். அனுதாபமும் இருக்கும்.
மூன்றாம் பாதம்:
விஷ்ணுவை அதிபதியாகக் கொண்ட புதன், இந்தப் பாதத்துக்குத் தலைவன். தெய்வ பக்தியும் பிறருக்கு உதவும் குணங்களும் இருக்கும். இனிமையான இல்லறம் அல்லது பற்றில்லாத துறவறம் என்று எல்லைகளுக்கப்பால் சிந்திப்பவர்கள். எடுத்த காரியத்தை முடிக்கும் ஆற்றல் உள்ளவர்கள். சொன்னதைச் செய்பவர்கள்.
நான்காம் பாதம்:
இதன் அதிபதி சந்திரன். சுயநலம் உள்ளவர்கள். கௌரவம்,  சொத்து சுகங்களை நாடுபவர்கள். பேராசை, பொறாமை, முன்கோபம் இவர்களது முக்கிய குணங்கள். ஆடம்பரத்தில் நாட்டமுள்ளவர்கள். காரியவாதிகள். உதவி செய்தவர்களை எளிதில் மறந்துவிடுவார்கள். எப்போதும் முதன்மை ஸ்தானத்தை விரும்புவார்கள்.
பூரம்:
இரண்டு கண்களின் கருமணிகள்போல் அமைந்த இரண்டு நட்சத்திரங்கள் இதில் அடங்கும். இதுவும் சூரியன் ஆட்சி செய்யும் சிம்ம ராசியில் அடங்கும்.
பொதுவான குணங்கள்:
நுண்கலைகளான ஓவியம், இசை, நடனம், நாடக நடிப்பு போன்றவற்றில் ஈடுபாடும் திறமையும் இருக்கும். கலைக்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள். பேராசை, புகழாசை, பொருளாசை கொண்டவர்கள். ஆடை அணிகலன்கள் அணிவதில் விருப்பம் கொண்டவர்கள். அழகை ஆராதிப்பவர்கள். தங்கள் புகழையே பேசிக்கொண்டிருப்பவர்கள். தான தர்மங்கள் செய்து அதனால் புகழும் பெருமையும் அடைய ஆசையுள்ளவர்கள்.
முதல் பாதம்:
இதன் அதிபதி சூரியன். திறமைசாலிகள். நல்ல நினைவாற்றல் உள்ளவர்கள். பேச்சுத்திறமை மிக்கவர்கள். எதையும் எதிர்த்துப் போராடி, எப்படியாவது வெற்றியடைய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள். நண்பர்களை நேசிப்பவர்கள். உடல் நலனில் கவனம் செலுத்தமாட்டார்கள்.
இரண்டாம் பாதம்:
இதன் அதிபதி புதன். நல்ல கல்வியும் திறமையும் இருந்தாலும், அடிக்கடி தோல்வியைச் சந்திப்பார்கள். தனக்கொரு நியாயம், பிறருக்கொரு நியாயம் என்ற பாகுபாடு கொண்டவர்கள். தோல்வியைக் கண்டு துவண்டுவிடுவார்கள். பிறர் உதவியை எப்போதும் எதிர்பார்த்து, பிறரைச் சார்ந்து வாழ நினைப்பவர்கள். தெய்வ பக்தி உள்ளவர்கள்.
மூன்றாம் பாதம்:
சுக்கிரன் இதன் அதிபதி. ஆசாபாசம் மிக்கவர்கள். ஓவியம், சிற்பம், புகைப்படம் எடுப்பது போன்றவற்றில் ஈடுபாடு இருக்கும். பேராசை மிக்கவர்கள். பிறரைப் பற்றிக் கவலைப்படாமல் தன் சுகத்தையும், முன்னேற்றத்தையும் பற்றி மட்டுமே சிந்திப்பவர்கள்.
நான்காம் பாதம்:
செவ்வாய் இதன் அதிபதி. அவசரப்பட்டு முடிவெடுப்பவர்கள். பணத்தைச் சேர்த்த வேகத்தில் செலவழித்து விட்டுக் கஷ்டப்படுபவர்கள். திட்டமிட்டுச் செயலாற்றும் திறமை இருக்காது. தெரியாமல் தவறுகள் செய்துவிட்டு, அதனால் பெயரும் புகழும் பாதிக்கும் சூழ்நிலை இவர்களுக்கு ஏற்படும். செவ்வாய்க் கிழமைகளில் பக்தியுடன் முருகனை வழிபட்டால், துயரங்கள் நீங்கும்.
உத்திரம்:
இது இரட்டை நட்சத்திரம். பூர நட்சத்திரம் போலவே இரு கண் விழிகள்போல் அமைந்தவை. நேர் கோட்டில் அமையாமல், சற்று ஏற்றத்தாழ்வுகளுடன் அமைந்தவை. இதன் முதல் பாதம் சிம்ம ராசியிலும் 2, 3, 4 பாதங்கள் கன்னி ராசியிலும் அமையும். முதல் பாதத்திற்கு ராசிநாதன் சூரியன். மற்ற மூன்று பாதங்களின் ராசிநாதன் புதன்.
பொதுவான குணங்கள்:
திறமைசாலிகள். கல்வியறிவும், சமயோசித புத்தியும் கொண்டவர்கள். ஆசாபாசங்கள் அதிகமிருந்தாலும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற தர்ம சிந்தனை இருக்கும். கோபம் இருந்தாலும், தன்னடக்கமும் இருக்கும். ‘தான் நினைத்ததுதான் சரி’ என்ற பிடிவாத குணமும் உண்டு. தெய்வபக்தி, நேர்மை உள்ளவர்கள்.
முதல் பாதம்:
இந்தப் பாதத்தின் அதிபதி குருபகவான். அறிவாற்றல், திறமை, உழைப்பு, நியாய உணர்வு மிக்கவர்கள். சாஸ்திரங்களில் ஈடுபாடும், நம்பிக்கையும் இருக்கும். குருவை நாடி ஞானம் பெற நினைப்பவர்கள். உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். சூது, கபடம், பழிவாங்கும் வெறி போன்ற தீய குணங்கள் இருக்காது. அன்பும், பண்பும், சகோதர பாசமும் உள்ளவர்கள்.
இரண்டாம் பாதம்:
இதனை ஆட்சி செய்பவர் சனி. பொருளும், புகழும் சேர்ப்பதில் ஈடுபாடு மிக்கவர்கள். தலைமைக் குணங்கள் மேலோங்கி நிற்கும். சுயநலம் மிக்கவர்கள். அவசரக்காரர்கள். ஈட்டிய பொருளை இழந்து தவிப்பவர்கள்.
மூன்றாம் பாதம்:
இதற்கும் அதிபதி சனியே. 2-ம் பாதத்துக்கு உரியவர்களின் இயல்பும் குணங்களும் இவர்களுக்கும் இருக்கும். கர்வம், ஆணவம், ‘தான்’ என்ற அகம்பாவம் மிக்கவர்கள். எனவே, பலரால் விரும்பப்படாதவர்கள். வெற்றிக்காக எதையும் செய்பவர்கள்.
நான்காம் பாதம்:
இதன் அதிபதி குரு. நிதானமானவர்கள். அடக்கமானவர்கள். வளைந்து கொடுத்து வாழத் தெரிந்தவர்கள். கல்வியில் சிறந்தவர்கள். திறமைசாலிகள். நல்ல உழைப்பாளிகள். தர்மசிந்தனை உள்ளவர்கள்.
அஸ்தம்
அஸ்தம் என்றால் ‘உள்ளங்கை’ என்று பொருள். ஐந்து நட்சத்திரங்களின் கூட்டமானது நமது கை விரல்களின் நுனிகளைக் குறிப்பதுபோல அமைந்துள்ளன. கன்னி ராசியைச் சேர்ந்த இதன் ராசிநாதன், புதன்.
பொதுவான குணங்கள்:
நல்ல அறிவு, விடாமுயற்சி, கடுமையான உழைப்பு, அளவு கடந்த தன்னம்பிக்கை இவர்களது குணாதிசயங்கள். பொறுமையாக இருந்து காரியத்தைச் சாதிப்பவர்கள். ‘அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்ற வாசகத்துக்கு ஏற்ப பணிந்து நடந்து, பெரிய பதவிகளைப் பெறுபவர்கள். அன்பு, காதல், இரக்கம் போன்ற குணச்சிறப்புகள் இவர்களுக்கு உண்டு. மனம் லயிக்காத காரியத்தைச் செய்யமாட்டார்கள்.
முதல் பாதம்:
இது செவ்வாயின் அம்சம். பொய் புரட்டு இல்லாதவர்கள். வெளிப்படையாகப் பேசுபவர்கள். வீண் ஆடம்பரத்தை விரும்பாதவர்கள். நல்லவர்கள்.
இரண்டாம் பாதம்:
இது சுக்கிரனின் அம்சம். கவர்ச்சியான தோற்றத்தை விரும்புபவர்கள். சுக போகங்களில் நாட்டமுள்ளவர்கள். பயந்த சுபாவம் உள்ளவர்கள். நீதி, நேர்மையில் நாட்டம் மிக்கவர்கள்.
மூன்றாம் பாதம்: 
இதன் அதிபதி புதன். தெய்வ பக்தியும், நேர்மையான குணமும் உள்ளவர்கள். அறிவுப் பசி உள்ளவர்கள். பேச்சுத் திறமையும், வியாபாரத் திறமையும் உள்ளவர்கள். கலைத்துறையிலும் ஈடுபாடு இருக்கும்.
நான்காம் பாதம்:
இதன் அதிபதி சந்திரன். மனத்தின் விருப்பப்படி வாழ நினைப்பவர்கள். ஆசை, பாசம், நேசம் மிக்கவர்கள். தயை, இரக்கம் உள்ளவர்கள். பகிர்ந்துண்டு வாழ்வதில் மகிழ்ச்சி பெறுபவர்கள். தலைமை தாங்கும் குணங்கள் உண்டு.
சித்திரை
இது ஒற்றை நட்சத்திரம். ஒரு வட்டத்தின் நடுப்புள்ளி போன்று தோற்றம் அளிப்பது. வெண்மையான வண்ணத்துடன் மிக அழகாகத் தோற்றம் அளிப்பதால், ‘சௌம்ய தாரா’ என்று இந்த நட்சத்திரம் அழைக்கப்படுகிறது. எல்லா சுப காரியங்களுக்கும் உகந்த நட்சத்திரம் இது.
ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு பழமொழியைச் சொல்லி பயமுறுத்தும் சம்பிரதாயம் நம் நாட்டில் உண்டு. ஆனால், அந்தப் பழமொழிகளின் கருத்துக்கு ஆதாரம் கிடையாது. சித்திரை நட்சத்திரம் குறித்தும், ‘சித்திரை அப்பன் தெருவிலே’ எனும் பழமொழி உண்டு. இதனால் பயந்து, தகப்பனைக் காப்பாற்ற சித்திரையில் பிறக்கும் பிள்ளையை தத்துக் கொடுக்கும் பழக்கமும் தமிழகத்தில் குறிப்பிட்ட சமூகத்தவரில் காணப்படுகிறது. இது அறியாமை என்பதே ஜோதிட வல்லுநர்களின் கூற்று.
பிறந்த குழந்தை எந்த நட்சத்திரமாக இருந்தாலும், நூற்றில் இரண்டு தகப்பன்மார்கள் வெவ்வேறு காரணங்களுக்காக குடும்பத்தைப் பிரிந்து செல்ல நேரிடலாம். இது அந்தத் தகப்பனின் ஜாதகத்தைப் பொறுத்தது. ஆகவே, சித்திரையில் பிறக்கும் எல்லா குழந்தைகளின் தந்தைமார்களுக்கும் இப்படித்தான் நேரிடும் என்று பயமுறுத்துவது மூடத்தனம்.
சித்திரையின் முதல் இரண்டு பாதங்கள் கன்யா ராசியிலும், அடுத்த இரண்டு பாதங்கள் துலா ராசியிலும் அமையும்.
பொதுவான குணங்கள்:
அழகிய தோற்றம், அன்போடு பழகும் தன்மை, பேச்சுத் திறமை, ஆடம்பரத்தில் பிரியம், தற்புகழ்ச்சியில் ஆர்வம், பொருள்களில் பற்று ஆகியவை இந்த நட்சத்திரக்காரர்களின் பொதுவான இயல்புகள்.
முதல் பாதம்:
இதன் அதிபதி சூரியன். சிறந்த கல்வியறிவு, திறமை, கடமையுணர்வு, கடும் உழைப்பு இவர்களது இயல்புகள். துணிச்சல் குறைவானவர்கள், முடிவெடுப்பதில் குழப்பம் உள்ளவர்கள். மற்றவர்கள் வழிகாட்டுதல் இருந்தால் இவர்கள் ஜெயிப்பார்கள்.
2-ம் பாதம்:
இதன் அதிபதி புதன். தெய்வபக்தி, நல்லொழுக்கம், நீதி-நேர்மை உள்ளவர்கள். தன்னம்பிக்கை குறைவு. குழப்பமான சிந்தனையால், இவர்கள் எடுத்துக்கொள்ளும் காரியங்கள் தாமதமாகும்.
3-ம் பாதம்:
இதன் ஆட்சி கிரகம் சுக்கிரன். ஆசாபாசம் மிக்கவர்கள். பிறருக்கு உதவும் சுபாவம் மிகுதியாகக் காணப்படும். நல்லதையே நினைத்து, நல்லதையே செய்ய விரும்புபவர்கள். குடும்பத்தை நேசிப்பவர்கள்.
4-ம் பாதம்: இது செவ்வாயின் ஆட்சிக்கு உட்பட்டது. இவர்கள் தைரியசாலிகளாகவும், நல்ல பேச்சாளர்களாகவும் திகழ்வர். வெற்றி அடையும் வெறியும் உண்டு. தலைமை தாங்கும் இயல்புகள் உண்டு. நன்மை தரும் செயல்கள் அல்லது தீமை பயக்கும் செயல்கள் எதுவானாலும் எடுத்துக்கொண்ட காரியத்தைப் பிடிவாதமாக நடத்தி முடிப்பவர்கள். கோபமும் ஆவேசமும் உள்ளவர்கள்.
சுவாதி
தேவ கணத்தைச் சேர்ந்தது இந்த நட்சத்திரம். மாதுளை முத்து போன்று சிவந்து காணப்படும் இது, ஒரு வைரக்கல் நடுவில் ஜொலிப்பது போன்று தோற்றமளிக்கும். இதுவும் ஒற்றை நட்சத்திரமே! பௌர்ணமி தினங்களில் ஆக்ஸிஜன் எடுக்க கடலின் மேற்பரப்புக்குச் சிப்பிகள் வரும்போது, விண்ணிலுள்ள பனித் துளிகள் அதில் விழுந்து முத்தாகும் நிகழ்வு, சுவாதி நட்சத்திரத்து நாளில்தான் சாத்தியமாகும் என்று ரஸகுளிகை சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
பொதுவான குணங்கள்:
அழகும், தெய்வ பக்தியும் மிகுந்தவர்கள். கூரிய அறிவு, ஞாபக சக்தி, கலைகளில் ஆர்வம், தன்னம்பிக்கை, தாராள மனப்பான்மை, இரக்க சிந்தனை கொண்டவர்கள். ஓரளவு தர்ம நியாயத்தைக் கடைப்பிடிப்பவர்கள். அதேநேரம் கோபம், பாசம், சுயநலமும் இவர்களிடம் உண்டு. இந்த நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் துலா ராசியில் அமையும். துலாக்கோல் போல் நல்லது- கெட்டதை சீர்தூக்கிப் பார்த்து, தீயதை அகற்றி நல்லதைக் கடைப்பிடித்து, வாழ்வில் உயர்பவர்கள்.
முதல் பாதம்:
இதன் ஆட்சிக் கிரகம் குரு. புத்திசாலிகள். தைரியசாலிகள், நியாயவாதிகள், பேச்சுத்திறன் உடையவர்கள், பல மொழிகளைக் கற்பார்கள். கவிதைத் திறமை இருக்கும். அழகை ஆராதிப்பவர்கள். திட்டமிட்டுச் செயல்படுபவர்கள்.
2-ம் பாதம்:
இதனை ஆட்சி செய்பவர் சனி. இந்த பாதத்தைச் சேர்ந்தவர்கள் கடும் உழைப்பால் பொருளீட்டுவர். அதிகாரம் செய்வார்கள். சுயநலம் கொண்டவர்கள். சாதிக்கத் துடிப்பவர்கள். சொத்து சேர்க்கவும் விரும்புவர். தலைமைப் பண்பு மிகுந்தவர்கள். நல்ல நண்பர்களாகத் திகழ்வர்.
3-ம் பாதம்:
இதற்கும் அதிபதி சனி பகவான்தான். இந்த பாதத்தைச் சேர்ந்தவர்களுக்கு கர்வம் இருக்கும். ஆழமானவர்கள்; கோபமும் மூர்க்கத்தனமும் உண்டு. அவசரமாகச் சிந்தித்து, அவசரமாக செயல்பட்டுத் தவறிழைப்பார்கள். உணர்ச்சிவசப்படுபவர்கள். ஆனால் பாசமும், கடமை உணர்ச்சியும் மிக்கவர்கள்.
4-ம் பாதம்:
இதன் அதிபதி குரு. நல்ல நடத்தை, புகழைத் தேடும் உத்வேகம் உண்டு. மற்றவர்கள் மெச்ச வாழ்வார்கள். நட்பு, உறவுகளிடம் பற்றும் பாசமும் மிக்கவர்கள். ஆடம்பரத்தை விரும்புவார்கள். தெய்வ பக்தி, கடமையுணர்வு மிக்கவர்கள். உழைத்து உயர்பவர்கள்.
விசாகம்
இது முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம். குயவனின் மண்பாண்ட சக்கரத்தைப் போல் அமைந்துள்ள ஐந்து நட்சத்திரங்களின் கூட்டம் இது. விசாகத்தின் முதல் மூன்று பாதங்கள் துலா ராசியிலும், 4-ம் பாதம் விருச்சிக ராசியிலும் அமையும்.
பொதுவான குணங்கள்:
அறிவாளிகள், தெய்வபக்தி உள்ளவர்கள், கடமை உணர்வுடன் செயலாற்றுபவர்கள், ஆடம்பரப் பிரியர்கள், பணம் சேர்ப்பதில் ஆவல் கொண்டவர்கள், உணவு மற்றும் சிற்றின்பங்களில் ஈடுபாடு கொண்டவர்கள், மனித நேயமும், நியாய உணர்வும் உள்ளவர்கள், பேச்சுத் திறமை கொண்டவர்கள்.
முதல் பாதம்:
இதன் அதிபதி செவ்வாய். இந்த பாதத்தில் பிறந்தவர்கள் சுகவாசிகளாகத் திகழ்வர். சொத்து சுகம் மட்டுமின்றி, நட்பையும் சுற்றத்தையும் விரும்புவார்கள். கோபம், எளிதில் உணர்ச்சிவசப்படுதல், பிடிவாதம், பிறரை நம்பாமை ஆகிய குணங்களும் இவர்களிடம் உண்டு.
2-ம் பாதம்:
இதன் அதிபதி சுக்கிரன். இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள் சுகவாசிகள். சுயநலம் மிகுந்தவர்கள். வாழ்க்கையை ரசித்து வாழ்வர். உணர்ச்சிபூர்வமாகத் திகழும் இவர்கள், நல்ல அறிவாளிகள். தன்னம்பிக்கையும், கலைகளில் ஈடுபாடும் உண்டு.
3-ம் பாதம்:
இதன் அதிபதி புதன். இதில் பிறந்தவர்கள் பக்திமான்கள். கணிதம், விஞ்ஞானத்தில் ஈடுபாடு கொண்டவர்கள். திட்டமிட்டு வாழ்பவர்கள். பிறரை நம்பமாட்டார்கள். உயர் பட்டங்கள், பதவிகளைப் பெறுவார்கள். புகழுடன் வாழ்வார்கள்.
4-ம் பாதம்:
இதன் அதிபதி சந்திரன். இதில் பிறந்தவர்கள் பொருளீட்டுவதில் வல்லவர்கள். தாராளமாகச் செலவு செய்வார்கள். குடும்பப் பாசம் மிக்கவர்கள். சுகமான, ஆடம்பரமான, கௌரவமான வாழ்க்கை வாழ விரும்புபவர்கள். தாராள மனப்பான்மை இருக்கும். பொதுவாழ்வில் ஈடுபாடு இருக்கும். புகழை நாடுபவர்கள்.
அனுஷம்
வானத்தில் அமைந்துள்ள 3 நட்சத்திரங்களின் கூட்டமே அனுஷம். இதன் அமைப்பு, ஒரு மன்னனின் வெண்கொற்றக் குடை போல் தோற்றம் அளிக்கும். இந்த நட்சத்திரத்துக்கு அனுராதா, ம்ருதுதாரா ஆகிய பெயர்களும் உண்டு. அனுஷ நட்சத்திர நாளை ‘வெள்ளை நாள்’ என்கிறது ஜோதிட சாஸ்திரம். உழைப்பையும் உயர்வையும் தரும் உத்தம நட்சத்திரம் இது. விருச்சிக ராசியைச் சேர்ந்த இந்த நட்சத்திரத்தின் தேவதை சூரியன்; ராசி அதிபதி செவ்வாய்.
விருச்சிக ராசியைச் சேர்ந்த அனுஷம் மகா நட்சத்திரமாகும். இதில் பிறப்பவர்களுக்கு முதலில் சனி தசை நடக்கும். இதன் காலம் 19 வருஷம். திருமணப் பொருத்தங்கள் பார்க்கும்போது, அனுஷத்துக்கு மற்றெல்லா நட்சத்திரங்களும் பொருந்தும் என்பார்கள். இது இந்த நட்சத்திரத்தின் தனிச்சிறப்பு.
பொதுவான குணங்கள்: 
பசி பொறுக்காதவர்கள். வெள்ளை மனம் கொண்டவர்கள். அன்பு, பாசம், நேசம் மிகுந்தவர்கள். அதிகம் பேசமாட்டார்கள். உண்மையைப் பேசுபவர்கள். தர்ம சிந்தனை உள்ளவர்கள். புகழ் அடைபவர்கள். வெளிநாட்டில் வாழ்வதில் விருப்பம் உள்ளவர்கள். தன்னம்பிக்கை கொஞ்சம் குறைவு; ஆனால், ஆழ்ந்த அறிவு உண்டு.
முதல் பாதம்:
சூரிய ஆதிக்கம் உள்ளதால், புத்திக்கூர்மையும், வைராக்கியமும் மிகுந்திருக்கும். ஞாபக சக்தியும் உண்டு. நூலறிவு பெறுவதில் ஆர்வம் இருக்கும்.
2-ம் பாதம்:
புதனின் ஆதிக்கம் உள்ளவர்கள். அழகான தோற்றமும், கலையுணர்வும் கொண்டவர்கள். அலங்காரத்தில் விருப்பமும், இசைக் கருவிகள் வாசிப்பதில் வல்லமையும் உண்டு. பொறுப்பும் பாசமும் உள்ளவர்கள்.
3-ம் பாதம்:
சுக்ர ஆதிக்கம் உள்ளவர்கள். பாசமும் நேசமும் மிகுந்தவர்கள். குடும்பப் பொறுப்புகள் அறிந்து நடப்பவர்கள். உழைப்புக்கு அஞ்சாதவர்கள். பிறருக்கு உதவிசெய்து மகிழ்பவர்கள்.
4-ம் பாதம்:
இதன் அதிபதி செவ்வாய். இவர்களின் வாழ்வில் ஏற்றத்தாழ்வுகளும், தடை-தாமதங்களும் இருக்கும். தீவிர முயற்சிக்குப் பிறகே முன்னேற்றம் கிடைக்கும். தாழ்வு மனப்பான்மை இருக்கும்.
கேட்டை
‘கேட்டை’யும் வெண்கொற்றக் குடை போல் திகழும் மூன்று நட்சத்திரங்களின் தொகுப்புதான். விருச்சிக ராசியைச் சேரும். இதன் அதிபதி செவ்வாய். இதில் பிறப்பவர்களுக்கு முதலில் புதன் தசை நடக்கும். நட்சத்திர வரிசையில் 18-வது நட்சத்திரம். வடமொழியில் இதை ‘ஜ்யேஷ்டா’ எனக் குறிப்பிடுவர்.
‘கேட்டையில் பிறந்தவன் கோட்டையும் கட்டுவான்; கேட்டையும் விளைவிப்பான்’,  ‘கேட்டையில் பிறந்தால், சேட்டனுக்கு ஆகாது’ என்றெல்லாம் பழமொழிகள் உண்டு. பழமொழி என்பது ஒருவரது அனுபவத்தில் தோன்றிய வாசகம்தான். அதற்கு சாஸ்திரத்தில் ஆதாரம் இல்லை. உதாரணமாக, கேட்டை என்பது தமிழ்ச் சொல்; சேட்டன் என்பது மலையாளச் சொல். சேட்டன் என்றால், சகோதரன் என்று பொருள். எதுகை மோனையாக இருப்பதால் யாரோ, எப்போதோ உருவாக்கிய வாசகம் இது. இதையெல்லாம் உண்மையாகக் கருதி, பயப்படக்கூடாது.
விருச்சிக ராசியில் சந்திரன் நீசமாக இருப்பதால், இதில் பிறந்தவர்கள் தங்கள் மனத்துக்குப் பிடித்ததை அவசரமாகச் செய்வார்கள். இதனால் வாழ்வில் தவறுகள் ஏற்பட்டு, பின்னர் வருந்தும் சூழல் ஏற்படும். இந்த நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கென ஒரு வழிகாட்டியையோ குருவையோ தேர்ந்தெடுத்து, அவர்களின் வழிகாட்டுதல்படி நடந்தால், பல சிக்கல்களைத் தவிர்க்கலாம்; அல்லது, சமாளிக்கலாம்.
பொதுவான குணங்கள்: இனிய சுபாவமும், அழகான தோற்றமும் கொண்டவர்கள். பொறுமைசாலிகள். ஏதேனும் பாதிப்பு நேரும்போது பயம், பதற்றம், கோபம் ஆகிய உணர்ச்சிகளுக்கு ஆளாவார்கள். சுகபோகிகள். பாசம் இருந்தாலும், வெளிப்படுத்தத் தெரியாதவர்கள். பிறரது அறிவுரையை விரும்பமாட்டார்கள்.
முதல் பாதம்:
இந்த பாதத்துக்கு அதிபதி குரு. அறிவு, திறமை, சாதிப்பதற்கான முயற்சி எல்லாம் இவர்களிடம் உண்டு. நல்லவர்கள், வல்லவர்கள் என்றாலும், உணர்ச்சிவசப்பட்டு அவசரமாகச் செயலாற்றி, அதனால் ஏற்படும் விளைவுகளால் வருத்தம் அடைவார்கள். எப்போதும் எதையாவது யோசித்துக் குழப்பம் அடைவது இவர்கள் வழக்கம். கோபம் அதிகமாக இருக்கும். மனத்தில் பட்டதை பயமில்லாமல் வெளிப்படையாகச் சொல்லிவிடுவார்கள். அதனால் பிறரால் அதிகம் விரும்பப்படாதவராக இருப்பார்கள். ஆனால், இவர்கள் நட்புக்கு முக்கியத்துவம் தருபவர்கள்.
2-ம் பாதம்:
இதற்கு அதிபதி சனி. பொருளும் புகழும் தேடுபவர்கள். உணர்ச்சிவசப்பட்ட செயல்களால், பல தருணங்களில் பொருளையும் பணத்தையும் இழந்து தவிப்பார்கள். கோபம் இருக்கும். குடும்பத்தை நேசிப்பவர்கள். தாராள மனப்பான்மை இருக்கும். தேக சுகத்தை விரும்புபவர்கள். உடல் நலத்தில் கவனம் இல்லாதவர்கள்.
3-ம் பாதம்:
இதற்கும் அதிபதி சனி பகவானே! 2-ம் பாதத்துக்கு உரியவர்களுக்கான எல்லா குணங்களும் இவர்களிடமும் இருக்கும். ஆன்மிகத் தேடல், கலைகளில் ஈடுபாடு இருக்கும்.
4-ம் பாதம்:
முதல் பாதத்தைப் போல் இவர்களுக்கும் அதிபதி குரு பகவான். நல்ல உடற்கட்டு, சுகபோகங் களில் பிரியம் இருக்கும். இவர்களது வாழ்வில் ரகசியம் மிகுந்திருக்கும். சாஸ்திர ஈடுபாடு, தெய்வபக்தி, பேச்சுத்திறன், எழுத்துத் திறமை எல்லாம் இருக்கும்.
மூலம்
அமர்ந்திருக்கும் சிங்கத்தைப் போல் தோற்றமளிக்கும் ஐந்து நட்சத்திரங்களின் கூட்டம் இது. தனுசு ராசியில் பூரண நட்சத்திரமாக இது அமைகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் சிங்கத்தின் இயல்புகள் இருக்கும். ‘ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்’ என்பர். ஆனால், ஏற்கெனவே சொன்னதுபோல், இதற்கெல்லாம் ஜோதிட சாஸ்திரத்தில் ஆதாரம் இல்லை.
அதேபோன்று, ‘மூலத்து மாமியார் மூலையிலே’ என்றும் சொல்வழக்கு உண்டு. அதாவது, மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆணையோ, பெண்ணையோ மணந்தால், மாமனார் உயிர்நீத்து விடுவார்; அதனால், மாமியார் விதவையாகி, மூலையில் உட்கார்ந்து விடுவார் எனும் பொருளில் அப்படிச் சொல்வார்கள். ஆனால், இதுவும் மூடநம்பிக்கையே! மாமனாரின் மரணத்தை நிர்ணயிப்பது அவரது ஆயுட்பலமும், அவர் மனைவியின் மாங்கல்ய பலமும், அவரது மூத்த பிள்ளையின் ஜாதகத்தில் தெரியும் கர்ம பலனும்தான் என்று சாஸ்திரம் தெளிவாகக் கூறுகிறது. இதில் மருமகனையோ மருமகளையோ மூல நக்ஷத்திரத்தை வைத்துக் காரணம் காட்டுவதும் பயப்படுவதும் அறியாமை.
பொதுவான குணங்கள்:  
தனுசு ராசியில் குருவை அதிபதியாகக் கொண்டவர்கள். அறிவையும் புகழையும் பெற பெரிதும் முயற்சிப்பார்கள். கொள்கைப் பிடிப்பு உள்ளவர்கள். நல்லவர்கள்; வல்லவர்கள். அதேநேரம் கர்வமும் மிகுந்திருக்கும். போராடுவதற்குத் தயங்காதவர்கள். இந்த நட்சத்திரத்துக்கு உரிய பறவை சக்ரவாக பக்ஷி. ஆதலால், இவர்களுக்கு இசையிலும் மற்ற கலைகளிலும் நாட்டம் இருக்கும். ‘யானைக்கு வாலாக இருப்பதைவிடவும் ஈக்கு தலையாக இருப்பது மேல்’ எனும் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்.
ஜாதக அம்சங்கள் உயர்வாக இருந்தால், பிறருக்கு உதவுவதில் நாட்டமும் தர்ம சிந்தனையும் அதிகம் இருக்கும். உணர்ச்சிவசப்படுதலும், கோபமும் உண்டு. ஆழ்ந்த தெய்வ பக்தியும், குடும்பத்தில் பாசமும் இவர்களது சிறப்பான குணங்கள். இந்த நட்சத்திரக் காரர்களுக்கு கேது தசை முதல் தசையாக அமையும்.
முதல் பாதம்:
செவ்வாய் இதன் அதிபதி. சுதந்திரமானவர்கள். நினைத்ததைச் செய்து முடிக்க விரும்புபவர்கள். பாசமுள்ளவர்கள். வாக்கைக் காப்பாற்றுபவர்கள். பிடிவாதமும் கோபமும் உள்ளவர்கள். உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள்.
2-ம் பாதம்:
இதன் அதிபதி சுக்கிரன். எல்லாவற்றுக்கும் ஆசைப்படுபவர்கள். கௌரவத்தை விரும்புபவர்கள். வீடு- வாகன யோகம் உள்ளவர்கள். குடும்பத்தில் பற்றுள்ளவர்கள். சொன்னதைச் செய்பவர்கள்; செய்ய முடிந்ததை மட்டுமே சொல்பவர்கள். ஓவியம், இசையில் ஈடுபாடு கொண்டவர்கள்.
3-ம் பாதம்:
இதன் அதிபதி புதன். அறிவாளி, திறமைசாலிகள். ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் செய்து பொருளீட்டுபவர்கள். தெய்வ பக்தியும் ஆன்மிகத் தேடலும் கொண்டவர்கள். நட்பு, காதல், பாசம் போன்ற சிறப்பான குணங்கள் இவர்களிடம் இருக்கும். எதற்கும் அஞ்சாத போராளிகள். கொள்கைப்பிடிப்பு உள்ளவர்கள்; சாதனையாளர்கள்; கலைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்கள். புதுமை விரும்பிகள்; நியாய உணர்வு உள்ளவர்கள். கோபமும் உண்டு, குணமும் உண்டு. பேச்சு, எழுத்தில் திறமை மிகுந்தவர்கள்.
4-ம் பாதம்:
இதன் அதிபதி சந்திரன். தலைமை தாங்கும் குணம் உண்டு. உயர் பதவி மற்றும் பொருளீட்டுவதில் ஆசை இருக்கும். அனைவரையும் நேசிப்பவர்கள். நல்ல நண்பராகத் திகழும் இவர்கள் நேர்மையான எதிரியாகவும் திகழ்வார்கள். பிடிவாதமும் கோபமும் உடையவர்கள். வாதத்திறமையும் கடமை உணர்வும் மிகுந்தவர்கள்.
பூராடம்
தனுர் ராசியில் அமையும் மற்றொரு நட்சத்திரம் பூராடம். ‘பூர்வாஷாடா’ என்றும் அழைக்கப்படும் பூராடம் இரண்டு நட்சத்திரங்கள் சேர்ந்தது. வான்வெளியில் ஒரு சாய்ந்த கம்பு போல் தோற்றம் தரும். இதனை ‘அர்த்ததாரா’ என்கிறது ஜோதிட சாஸ்திரம். முழுமையான நட்சத்திரமான இது, பெண்குணத்தைக் கொண்ட மனித கணத்தை சேர்ந்தது.
‘பூராடத்தின் கழுத்தில் நூலாடாது’ என்றொரு வழக்கு சொல் உண்டு. அதாவது, பூராட நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் அதிக காலம் சுமங்கலியாக இருக்கமாட்டார்கள் என்ற பொருளில் அப்படிச் சொல்வார்கள். இதற்கு ஜோதிட சாஸ்திரத்தில் எந்த ஆதாரமும் இல்லை. பூராட நட்சத்திரத்தில் பெண்ணைப் பெற்ற பெற்றோருக்கு பயம் தேவையில்லை. எத்தனையோ பெண்கள் பூராடத்தில் பிறந்து தக்க வயதில் திருமணமாகி, நல்ல குழந்தைச் செல்வங்களுடன் வாழ்ந்துவருவதையும் நாம் காணவே செய்கிறோம்.
பொதுவான குணங்கள்:
பூராடத்தில் பிறந்தவர்கள் நல்ல புத்திமான்கள். பொறுமையாக இருந்து காரியத்தை சாதிக்கும் வல்லமை உள்ளவர்கள். எடுப்பான தோற்றம் உள்ளவர்கள். சாமர்த்தியசாலிகள். எதையும் கூர்ந்து கவனித்து, ஆராய்ந்து முடிவெடுப்பவர்கள். இவர்களால் தோல்வியைத் தாங்க முடியாது. எனவே, தோல்வி நேராதவண்ணம் திட்டமிட்டு செயலாற்றும் இவர்கள், மற்றவருக்கும் வழிகாட்டியாகத் திகழ்வார்கள்.
முதல் பாதம்:
பூராடம் முதல் பாத அதிபதி சூரியன். அபார தன்னம்பிக்கை இவர்களின் பலம். எதையும் தான் செய்தால் மட்டுமே சரியாக இருக்கும் என நம்புபவர்கள். அதற்கேற்ப, எதையும் குறையின்றி தவறின்றி பூரணமாகச் செய்து முடிக்க விரும்புவார்கள். உழைப்பாளிகள். நியாயம், நேர்மை உள்ளவர்கள். எனினும், இவர்கள் 8 மணி நேரம் உழைத்தால் 6 மணி நேரத்துக்கான பலனே கிடைக்கும்! கடும் உழைப்பும் போதுமென்ற மனமும் இவர்கள் வாழ்வை வளம் பெறச் செய்யும்.
2-ம் பாதம்:
இதன் அதிபதி புதன். இரக்க குணமும், பிறருக்கு உதவும் மனமும் இவர்களின் தனிச்சிறப்பு இறை வழிபாட்டில் ஈடுபாடு உள்ளவர்கள். இனிமையான பேச்சு, கவர்ச்சியான தோற்றம் கொண்டவர்கள். சகல சௌபாக்கியங்களும் இவர்களுக்குக் கிடைக்கும்.
மூன்றாம் பாதம்:
இதன் அதிபதி சுக்கிரன். ஆசை, பாசம், கோபதாபம், விரும்பியதை அடைய நினைக்கும் ஆவேசம் – பிடிவாதம் ஆகியவை இவர்களது குணங்கள். சில தருணங்களில் இவர்களின் இந்த இயல்புகளே வெற்றிக்கு அடிகோலும். ஒழுக்கம், நேர்மை, முன்ஜாக்கிரதை மிகுந்தவர்கள். எதிர்மறைச் சிந்தனைகள் மிகும்போது, இவர்களின் இயல்பான தன்னம்பிக்கைக் குறையும்.
4-ம் பாதம்:
இதன் அதிபதி செவ்வாய். கோபமும் ஆவேசமும் உள்ளவர்கள். பிறரை அடக்கி ஆள விரும்புபவர்கள். தலைமைப் பண்பு மிகுந்திருக்கும். எப்போதும் தங்களின் தனித்தன்மையை நிலைநாட்டுவதற்காக, பிறரை எளிதில் தங்களுடன் பழக விடமாட்டார்கள். தங்களின் காரியத்தைச் சாதிக்க எதையும் செய்ய தயங்காதவர்கள். செய்த தவறுகளையே மீண்டும் செய்து அதனால் துன்பத்துக்கு ஆளாவர். பெரியோர்களின் நல்லுரைகளும் உபதேசங்களும் இவர்களுக்குப் பிடிக்காது. தங்களிடம் உள்ள குறைகளைத் தெரிந்துகொண்டு, அவற்றைத் தவிர்த்து வாழ்ந்தால், எல்லா செல்வங்களும் இவர்களை வந்தடையும்.
உத்திராடம்
நான்கு கால்களைக் கொண்ட கட்டிலின் இரண்டு கால் தடத்தில் அமைந்திருக்கும் இரண்டு நட்சத்திரங்கள் உத்திராடத்தில் அடங்கும். இதை ‘முக்கால் நட்சத்திரம்’ என்கிறது ஜோதிடம். நல்ல காரியங்களும் சுபகாரியங்களும் செய்ய உகந்தது என்பதால், ‘மங்கள விண்மீன்’ என்றும் இதைச் சிறப்பிப்பார்கள். இதன் முதல் பாதம் தனுசிலும் மற்ற மூன்றும் மகர ராசியிலும் அமைகின்றன.
பொதுக் குணங்கள்:
அறிவுப்பசி, ஆசாரம், தெய்வ பக்தி, தர்ம சிந்தனை, நேர்மை, வாய்மை மிகுந்தவர்கள். மனத்தில் பட்டதை சட்டென்று வெளிப்படுத்துவதால், சில தருணங்களில் பலருக்கும் வேண்டாதவர்கள் ஆகிவிடுவர்.நல்ல தோற்றம், பேச்சுத் திறமை, வெற்றியைத் தேடிச் செல்லும் முயற்சி ஆகியவை இவர்களின் பொதுவான குணங்கள்.
முதல் பாதம்:
இதன் அதிபதி குரு. இவர்களிடம் சாஸ்திர அறிவு மிகுந்திருக்கும். நல்லதைப் பிறருக்குச் சொல்வதில் வல்லவர்கள்- நல்ல வழிகாட்டிகள். குரு பக்தி கொண்டவர்கள். பூஜை புனஸ்காரத்தில் ஈடுபாடு கொண்டவர்கள்.
2-ம் பாதம்:
இதன் அதிபதி சனி. ஆசை மிகுந்தவர்கள். ஊதாரித்தனமாக பணத்தைச் செலவழிப்பவர்கள். பிறர் கஷ்டங்களை உணராதவர்கள். அதிகாரம் செலுத்துவதில் விருப்பம் மிக்கவர்கள். சாப்பாட்டுப் பிரியர்கள். பழி வாங்கும் இயல்புடையவர்கள். தோல்வியைத் தாங்க முடியாதவர்கள்.
3-ம் பாதம்:
இதற்கும் சனிபகவானே அதிபதி. 2-ம் பாதத்துக்கு உரியவர்களின் குணங்கள் அனைத்தும் இவர்களுக்கும் உண்டு. தீவிர பக்தி செய்து, உலகியல் பலன்களையும் ஐஸ்வர்யங்களையும் அடைய விரும்புபவர்கள். பிடிவாதக்காரர்கள். பிறரை மதிக்கத் தெரியாதவர்கள். தங்களது இயல்புகளை மாற்றிக்கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை சிறக்கும்.
4-ம் பாதம்:
இதன் அதிபதி குரு. கருணையும், தர்ம சிந்தனையும் இவர்களது இயல்பு. துணிச்சல் மிக்கவர்கள். தர்மத்தைக் கடைப்பிடிப்பதில் தீவிரமானவர்கள். தீமையை எதிர்த்துப் போராடுபவர்கள். பிறர் நலம் கருதி வாழ்பவர்கள்.
திருவோணம்
ஸ்ரீமகாவிஷ்ணுவின் நட்சத்திரம். கேரளத்தில் வாமன அவதாரத்துக்குக் காரணமான மகாபலியைப் போற்றும் வகையில், ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இதனை சிரவணம் என வடமொழியில் குறிப்பிடுவர்.
திரிபுரத்தை எரிக்க சிவபெருமான் போரிட்டபோது, அவர் அமைத்த தேரிலும் ஆயுதங்களிலும் பல்வேறு தேவர்களும் சிவபெருமானுக்குச் சேவை செய்ததாக சிவபுராணம் கூறுகிறது. அதில் மேருமலை வில்லாக, மகாவிஷ்ணு அஸ்திரமானார். அதன் கூரான முனையில் அக்னியும் மறு முனையில் யமனும் அமர்ந்திருந்தனர். திரிபுரம் எரித்து அசுர சம்ஹாரம் நிகழ்ந்தது என்பது புராண வரலாறு. திருவோணமும் ஓர் அம்பு அல்லது அஸ்திர வடிவில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முதல் பாதம்:
செவ்வாய் இதன் அதிபதி. இதில் பிறந்தவர்கள் சௌகரியத்தை விரும்புவர். தனக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிப்பவர்கள், பிறருக்கு செலவழிக்க யோசிப்பார்கள். உடல்நலக் குறைவு அவ்வப்போது ஏற்படும். காரியம் சாதிப்பதில் வல்லவர்கள்.
2-ம் பாதம்:
சுக்கிரன் இதனை ஆட்சி செய்பவர். இவர்கள் சுகத்தை விரும்புபவர்கள். திறமைசாலிகள். தலைமை தாங்கும் இயல்பும், தெய்வபக்தி உள்ளவர்கள். பெரியோர்களை மதிப்பவர்கள்.
3-ம் பாதம்:
புதன் இதன் அதிபதி. நிறைவான ஞானம், பக்தி உடையவர்கள். யோகி போல வாழ்பவர்கள். தர்மம் செய்வதிலும் கலைகளிலும் ஈடுபாடு கொண்டவர்கள். கோபம், குணம் இரண்டும் இருக்கும்.
4-ம் பாதம்:
சந்திரன் இந்தப் பாதத்தை ஆட்சி செய்கிறார். இவர்கள் சௌகரியமும், சௌபாக்கியமும் பெற்று வாழ்பவர்கள். பாசமும் நேசமும் மிக்கவர்கள். குடும்பத்தை நேசிப்பவர்கள். நட்பு மிக்கவர்கள். நியாயவாதிகள். உடனடிக் கோபமும் உடனடி சாந்தமும் இவர்கள் இயல்பு.
அவிட்டம்
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடமையில் ஆர்வம் கொண்டவராகவும், கம்பீரமானவராகவும், தைரியசாலியாகவும், செல்வாக்கு மிக்கவராகவும், முன்கோபியாகவும், மனைவியை நேசிப்பவராகவும் இருப்பார்கள்.
சதயம்
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொறுமைசாலி யாகவும், வசீகரனமானவராகவும், நட்புக்காக செயல்படுவராகவும், முன்யோசனை கொண்டவராகவும், ஒழுக்கமானவராகவும், திறமையாக செயல்படுபவராகவும், செல்வந்தராகவும் இருப்பார்கள்.
பூரட்டாதி
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொழிலில் ஆர்வம் மிக்கவராகவும், மன திடமானவராகவும், பலசாலியாகவும், சுகபோகியாகவும், பழக இனியவராகவும், குடும்பத்தை நேசிப்பவராகவும் இருப்பார்கள்.
உத்திரட்டாதி
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பக்திமானாகவும், கல்வியாளராகவும், கடமையில் ஆர்வமிக்கவராகவும், சாதுர்யமாகப் பேசுபவராகவும், ஆபரணப்பிரியராகவும் இருப்பார்கள்.
ரேவதி
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிரியை வெல்பவராகவும், தைரியசாலியாகவும், நேர்மையானவராகவும், சுகபோகத்தில் நாட்டமுடையவராகவும், பழக இனியவராகவும், தற்புகழ்ச்சி விரும்புபவராகவும் இருப்பார்கள்.